கொரோனா ஒழிப்பு சமருக்கு எதிரணியின் ஒத்துழைப்பை பெற தயார் – அரசு

கொரோனா வைரஸை இல்லாதொழிப்பதற்கு எதிர்க்கட்சியனரின் ஒத்துழைப்பையும் பெறுவதற்கு அரசு தயார். சர்வக்கட்சி கூட்டத்தை கூட்டுவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர் அறிவிப்பு விடுக்கப்படும் – என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த இணையவழி ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. இதன்போது சர்வக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” கொரோனா வைரஸ் பவரலைக்கட்டுப்படுத்துவதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகின்றது. இந்நிலையில் தமக்குள்ள சர்வதேச தொடர்பை பயன்படுத்தி ஏதேனும் விதத்தில் எதிர்க்கட்சி உட்பட எந்தவொரு தரப்பும் ஒத்துழைப்பு நல்கினால் அதனை பெற்றுக்கொள்வதற்கு அரசு தயார். சர்வக்கட்சி கூட்டத்துக்கான கோரிக்கை விடுக்கப்பட்டு 24 மணிநேரம்தான் ஆகின்றது. இது தொடர்பில் அரச தரப்பில் தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர் அறிவிப்பு விடுக்கப்படும்.

கொரோனா தொற்று ஏற்பட்டு ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகின்றது. எதிரணி கூறுவதுபோல அவர்களுக்கு சர்வதேச தொடர்பு இருக்குமானால் அதனை பெற்று ஒத்துழைப்பு வழங்கலாம். ஆனால் இன்னும் அவ்வாறு வழங்கப்படவில்லை.

ஒத்துழைப்பு வழங்கப்படும் என சர்வதேச நாடுகள் எதிர்க்கட்சித் தலைவரிடம் உறுதியளித்துள்ளனவா என்பது பற்றி எமக்கு தெரியாது. அது பற்றி எதிர்க்கட்சித் தலைவரிடம் அறிவிப்பு விடுக்கவில்லை. அவ்வாறு அறிவித்தால், நாமும் தூதுவர்களுடன் கலந்துரையாடலாம். ஆனால் அரசுக்கு வழங்கப்பட்டுள்ள ஒத்துழைப்புகள் குறித்து, தொடர்ந்தும் அவ்வாறான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் என்றே வெளிநாட்டு தூதுவர்கள் கூறியுள்ளனர். இதைவிடவும் விசேடமாக எதாவது அறிவித்திருந்தால் அது பற்றி எதிர்க்கட்சித் தலைவர் அறிவிக்கலாம்.” – என்றார்.

Related Articles

Latest Articles