‘கொரோனா’ ஒழிப்புக்கான அரசின் வேலைத்திட்டங்கள் எவை?

கொரோனா நெருக்கடி நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக சர்வக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை ஜனாதிபதி உடன் கூட்ட வேண்டும். பிரதமர், சபாநாயகர் மற்றும் சுகாதார அமைச்சரையும் இக்கூட்டத்துக்கு அழைக்க வேண்டும். அரசின் வேலைத்திட்டம் என்னவென்பது தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டும் – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் நேற்று விசேட அறிவிப்பொன்றை விடுத்த அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகின்றது. மரண எண்ணிக்கையும் 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்நிலைமையைக் கட்டுப்படுத்தாவிடின் 30 ஆயிரம்பேர்வரை உயிரிழக்கக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த மே மாதத்தில்போன்று கடும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டால் 12 ஆயிரம்பேர்வரைதான் உயிரிழப்பார்கள் எனவும் கூறப்படுகின்றது. எனவே, கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டால் 18 ஆயிரம் மரணங்களை தடுக்கக்கூடியதாக இருக்கும்.

தற்போதைய சூழ்நிலையில் கொரோனா நிலைமையை சமாளிப்பதற்காகவே சுகாதார சேவை முழுமையாக ஈடுபடுத்தப்படுகின்றது. அந்தவகையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் சுகாதார சேவையும் ஸ்தம்பிக்கும் அபாயம் காணப்படுகின்றது.

கொரோனா நிலைமையைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சி யோசனை முன்வைத்துள்ளது. இது தொடர்பில் ஆராய்வதற்கு நாடாளுமன்றத்தில் விவாதம் கோரியிருந்தோம். தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்தையும் கூட்டமுடியாத சூழ்நிலைமையே காணப்படுகின்றது. எம்.பிக்களுக்கும் கொரோனா ஏற்பட்டுள்ளது.

எனவே, நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை ஜனாதிபதி உடன் கூட்ட வேண்டும். பிரதமர், சபாநாயகர் மற்றும் சுகாதார அமைச்சரவையும் குறித்த கூட்டத்துக்கு அழைக்க வேண்டும். குறித்த சர்வக்கட்சி கூட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை எவ்வாறு கட்டுப்படுத்துவது, மரண எண்ணிக்கையை எவ்வாறு குறைப்பது, நெருக்கடி நிலைமை எப்படி எதிர்கொள்வது என்பது உட்பட அரசின் வேலைத்திட்டம் என்னவென்பது தொடர்பில் தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles