கொரோனாவில் இருந்து குணமடைந்த ஏராளமானோர் தலைமுடி உதிர்வை அனுபவிக்கின்றனர். தலைமுடி பல காரணங்களால் உதிரலாம். அதில் தொற்று காலத்தில் ஊட்டச்சத்து குறைபாடுகளால் கூட தலைமுடி உதிரலாம். பொதுவாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் மீள்வதற்கு ஆரோக்கியமான டயட் மிகவும் முக்கியம். போதுமான ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுகளை உட்கொண்டால் அது தலைமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்.
ஒருவரது தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு போதுமான அளவு நீர் குடிப்பதுடன், புரோட்டீன், பயோடின், இரும்புச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பி விட்டமின்கள், விட்டமின் சி, விட்டமின் ஈ மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்களும் அவசியம். எனவே கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் தங்களின் தலைமுடி அதிகம் உதிராமல் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகளான ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கும் சில உணவுகள்
முட்டையின் மஞ்சள் கருவில் ஆரோக்கியமான கொழுப்புக்கள் மற்றும் புரோட்டீன்கள் அதிகமாக உள்ளன. மேலும் இதில் பயோடின் என்னும் பின் விட்டமின் உள்ளது. இது தலைமுடியின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது மற்றும் தலைச்சருமத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது. மறுபுறம், பயோடின் குறைபாடு இருந்தால், தலைமுடி உடைந்து உதிரும். எனவே தினமும் ஒரு முட்டையை சாப்பிடுங்கள்.
பச்சை இலைக்காய்கறியான பசலைக்கீரை தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க மட்டுமின்றி, இதில் உள்ள அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் பாதிக்கப்பட்ட முடியின் ஆரோக்கியத்தை மீட்டெக்க உதவும். பசலைக்கீரையில் விட்டமின் ஏ, கே, ஈ, சி, பி-யுடன், மங்கனீசு, இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற தலைச்சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் சத்துக்களும் உள்ளன. இந்த வைட்டமின்கள் கொலாஜன் மற்றும கெரட்டின்களின் அளவை மேம்படுத்தி, தலைமுடி வளர்ச்சியின் செயல்முறையை வேகப்படுத்தும்.
அவகாடோ பழத்தில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், கொழுப்பு அமிலங்கள் மற்றும் விட்டமின் ஈ போன்ற தலைமுடிக்கு ஊட்டமளிக்கும் முக்கிய சத்துக்கள் உள்ளது. மேலும் இந்த பழத்தில் புரோட்டீன் மற்றும் பி விட்டமின்களும் அதிகமாக உள்ளன. எனவே இந்த பழத்தை தினமும் மில்க் ஷேக்காக செய்து சாப்பிடுவது நல்லது.
பருப்புக்களில் உள்ள புரோட்டீன் தலைமுடியின் வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, முடியை பட்டுப்போன்று மாற்றும். மேலும் இதில் ஜிங்க் மற்றும் பயோடின் உள்ளது. பீன்ஸில் உள்ள கார்போவைத்ரேட், புரோட்டீனை செல்களாக மாற்றி, முடியை உருவாக்குகிறது. கருப்பு சன்னாவில் உள்ள விட்டமின் ஏ, பி6, ஜிங்க், மங்கனீசு போன்றவை முடியின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. எனவே பருப்பு வகைகளில் ஏதேனும் ஒன்றை தினமும் சிறிது சாப்பிட்டு வர, தலைமுடி உதிர்வது குறையும்.
எலுமிச்சையில் விட்டமின் சி மிகவும் அதிகமாக உள்ளது. இது கொலாஜன் உருவாக்கத்திற்கு உதவுகிறது. கொலாஜன் தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமின்றி, இரும்புச்சத்தை உடல் உறிஞ்சவும் உதவி புரிந்து, தலைச்சருமத்தை வலுவாக்குகிறது. விட்டமின் சி அதிகம் நிறைந்த பிற உணவுகளாவன குடைமிளகாய், ஸ்ட்ராபெர்ரி, நெல்லிக்காய், பப்பாளி மற்றும் கிவி போன்றவை.
முழு தானியங்களான ஓட்ஸ், திணை, முழு கோதுமை, பார்லி போன்றவற்றில் பி விட்டமின் உள்ளது. இது தலைமுடி உடைவதைத் தடுப்பதோடு, முடியின் வளர்ச்சியையும் வலிமையையும் அதிகரிக்கிறது. மேலும் இதில் உள்ள அதிகளவிலான ஜிங்க் சத்து, தலைமுடி உதிர்வதை தடுக்க உதவுகிறது.
எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் உட்கொண்டு வந்தால், தலைமுடி அதிகம் உதிர்வதைத் தடுத்து, தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.