கோப் குழுவில் இருந்து நீக்கப்படுவாரா ரஞ்சித் பண்டார?

கோப் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார , கண்டி கிரிக்கெட் கெம்பஸ் திட்டத்தின் ஆலோசகராக பணியாற்றியுள்ளதால், ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை தொடர்பான விசாரணையின்போது கோப் குழுவில் இருந்து அவர் விலகி இருக்க வேண்டும்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். அத்துடன், மேலும் சில எதிரணி உறுப்பினர்களும் இந்த கோரிக்கையை சபாநாயகரிடம் முன்வைத்தனர்.

நாடாளுமன்றம் முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர் கூறியவை வருமாறு

” ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் வேலைத்திட்டமொன்றில் இவர் ஆலோசகராக பணியாற்றியுள்ளார். எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் நாடாளுமன்றத்தில் இதுபோன்ற முரண்பாடுகள் ஏற்படும் போது, நாடாளுமன்ற குழுக்களில் பதவி வகிக்க முடியாது , இது இவ்வாறு இருக்கும் போது அவர் எவ்வாறு கோப் குழுவின் தலைவராக செயற்பட முடியும்?

நான் எதிர்க்கட்சி தலைவர், மக்கள் வாக்குகளால் சபைக்கு வந்தவன். ஆனால் கோப் குழுவுக்கு வர முடியும், கருத்து தெரிவிக்க முடியாது என ரஞ்சித் பண்டார குறிப்பிடுகின்றார். இது எனது சிறப்புரிமையை மீறும் செயலாகும்.

எனினும், கோப் குழுவில் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவின் மகன் கனிஷ்க பண்டார அமர்ந்துள்ளார். அவருக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது?
எதிர்க்கட்சித் தலைவர் கூட கோப் குழுவில் அமர்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில்,கோப் குழு அதிகாரியாக இல்லாத இவர் எவ்வாறு வந்து அமர்ந்தார் என்பதுதான் பிரச்சினைக்குரிய விடயம் .

இங்கு சட்டம் பாரியளவில் மீறப்பட்டுள்ளது, எனவே பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவுக்கு கோப் குழுவின் தலைவராக இருக்க தார்மீக உரிமை இல்லை.” – என்றார் எதிர்க்கட்சி தலைவர்.

Related Articles

Latest Articles