“ஐக்கிய மக்கள் சக்தியில் கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஐக்கிய மக்கள் சக்தியை விட்டு சென்றாலும் அவருக்கு வாக்களித்த பசறை தொகுதி மக்கள் அவருடன் செல்லவில்லை. மாறாக அவருக்கு வாக்களித்தது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை நம்பியே தவிர அவருக்காக அல்ல. எனவே பசறை தொகுதி மக்கள் தற்போது தம்முடன் இனைந்து மிகுந்த சந்தோஷத்துடனும் ஆர்வத்துடன் செயற்படுகின்றனர்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியில் புதிதாக நியமிக்கப்பட்ட அமைப்பாளர் லட்சுமணன் சஞ்சய் இன்று பதுளையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த சில தினங்களுக்கு முன் அமைச்சர் ஜீவன் தொண்டமானினால் ஹட்டன் பகுதியில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. பொங்கல் விழா என்பது தமிழர்களின் பண்பாடு கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வாகும். சூரியனுக்கும் உழவர்களுக்கும் பசுக்களுக்கும் நன்றி செலுத்துவதற்காகவும் எமது அடுத்த தலைமுறை தைப்பொங்கல் பண்டிகையை சரியான முறையில் கடைபிடிப்பதற்காகவும் எமது நாட்டில் தேசிய பொங்கல் விழா கடந்த காலங்களில் நிகழ்த்தப்பட்டன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினாலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினாலும் , மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவினாலும் அவரவர்களின் காரியாலயங்களிலோ அல்லது அலரி மாளிகையிலோ பொங்கல் விழா இதுவரையில் நடத்தப்பட்டன. இப்பொங்கல் விழா நிகழ்வுகள் கடந்த காலங்களில் பண்பாடு கலாச்சாரங்களை பேணும் வகையிலேயே இடம்பெற்றன.
ஆனால் இம்முறை ஜீவன் தொண்டமானினால் ஹட்டன் நகரில் நடத்தப்பட்ட பொங்கல் விழாவானது தென்னிந்திய நடிகைகளின் முகம் காட்டி ஆடல் பாடல் நிகழ்வுகளாகவே நடத்தப்பட்டன. இதற்கு பெயர் பொங்கல் விழா அல்ல. மாறாக உள்ளுர் கலைஞர்களை எவ்வளவோ பேர் நம் நாட்டில் உள்ளனர் அவர்களை கௌரவித்திருக்கலாம்.
கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் செந்தில் தொண்டமானால் நடத்தப்பட்ட பொங்கல் விழாவானது மார்கழி மாதத்தில் நடத்தப்பட்டது தவறு என்றாலும் இந்நிகழ்வுகளில் பாரம்பரியமான நிகழ்வுகளையும் பண்பாட்டு கலாச்சாரத்தையும் அவர் வெளிப்படுத்தி இருந்தார்.
அத்துடன் 1700 ரூபா தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வேண்டும் என கூறிய அரசியல் வாதிகள், பொங்கல் விழாவை காண்பித்து சம்பள உயர்வு என்ற பேச்சை மறைத்துள்ளதாகவும் தற்போது உள்ள டொலரின் பெறுமதியிலும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலை ஏற்றத்தினாலும் 1700 ரூபா சம்பள உயர்வும் போதாது என அவர் மேலும் தெரிவித்தார்.










