“சனல் – 4 ஊடகமல்ல – அது திரைப்பட நிறுவனம், எதற்காக வீடியோவை அழிக்க வேண்டும்”?

“2009 முதலே ராஜபக்சக்களுக்கு எதிராக சனல் – 4 செயற்பட்டுவருகின்றது. அதனை ஒரு ஊடகமாக நான் பார்க்கவில்லை, அது திரைப்படம் இயக்கும் நிறுவனம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் சரியாக திரட்டப்பட்டிருப்பின் தமது இணையத்தில் இருந்து அந்த காணொளியை ஏன் சனல் – 4 நீக்க வேண்டும்.”

இவ்வாறு கேள்வி தொடுத்துள்ளார் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” நாம் கொள்கை ரீதியிலான அரசியலை நடத்துகின்றோமேதவிர, சந்தர்ப்பவாத அரசியலை நடத்தவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு ஒரு வருடத்துக்கு முன்னர் நடைபெற்ற தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அமோக வெற்றியை பதிவுசெய்தது. எனவே, கொள்கைக்கு அப்பால் சென்று மூன்றாம் தரப்பு உதவியுடன் தேர்தலை வெல்வதற்கு முற்படவில்லை. அதற்கான நோக்கமும் இருக்கவில்லை.

சனல் – 4 விற்கு ராஜபக்சக்களுடன், ராஜபக்ச குடும்பத்துடன் வைராக்கியம் இருந்துவருகின்றது. 2009 இல் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது முதல் சனல் – 4 வானது, ராஜபக்சக்களுக்கு எதிராக ஆவண வீடியோக்களை வெளியிட்டுவருகின்றது.

சனல் – 4வை ஒரு ஊடகமாக நான் பார்க்கவில்லை. அது திரைப்படம் தயாரிக்கும் நிறுவனம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான படம் தற்போது பதிவு செய்யப்பட்டிருந்தாலும், 2009 இல் போரை முடிவுக்கு கொண்டுவந்ததற்கு பழிதீர்க்கும் நடவடிக்கையாகவே உள்ளது. அவ்வாறு இல்லாவிட்டால் யாரோ ஒருவரின் அரசியல் நோக்கத்தை ஈடேற்றும் முயற்சி.” – என்றார்.

Related Articles

Latest Articles