“ஒற்றையாட்சியை பாதுகாப்பதற்கு 29 ஆயிரம் படையினர் உயிர் தியாகம் செய்துள்ளனர். எனவே, இந்நாட்டில் சமஷ்டி கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.” -என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த உறுப்பினரான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
” 2015 நல்லாட்சிகாலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அரசமைப்பு பணி இறுதிப்படுத்தப்படும் என்ற உறுதிமொழியை ஜனாதிபதி வழங்கியுள்ளார். இலங்கை மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் எனவும், மாகாண சபைகளுக்குரிய அதிகாரம் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மாகாண சபையில் நிறைவேற்றப்படும் சட்டங்களை மத்திய அரசாங்கம் இரத்து செய்ய முடியாது.
மாகாண இணைப்புக்குரிய அதிகாரமும் மாகாண சபைக்கு செல்லும். எல்லை நிர்ணயம்கூட மாகாணசபை வசம் செல்லும் வகையில் ஏற்பாடுகள் உள்ளன. எனவே, 2015 அரசமைப்பு அமுலுக்கு வந்தால் இலங்கை சமஷ்டி நாடாக மாறும். நாடாளுமன்ற அதிகாரம் குறையும். எனவே, இதற்கு இடமளிக்க கூடாது.
ஒற்றையாட்சியை பாதுகாப்பதற்கு படையினர் உயிர்தியாகம் செய்துள்ளனர். எனவே, சமஷ்டி முறைமைக்கு இடமளிக்கமாட்டோம். தமிழ் டயஸ்போராக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நாம் தயாரில்லை.
ஆட்சியாளர்கள் கள்வர்கள் எனக் கூறியே அநுர தரப்பு ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்னும் கள்வர்கள் பிடிபடவில்லை. இதன்மூலம் அவர்கள்கூறியது பொய்கள் என்பது உண்மையாகியுள்ளது.” – என்றார்.
