பெருந்தோட்ட தொழிலாளர்களின் நன்மை கருதி நாளை மறுதினம் (05.02.2021) முன்னெடுக்கப்படவுள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு கட்சி தொழிற்சங்க பேதங்களை மறந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்க மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது என்று முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
இது தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை நுவரெலியாவில் அமைந்துள்ள மலையக மக்கள் முன்னணி காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் விஜயசந்திரன், தேசிய அமைப்பாளர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் கே.சுப்பிரமணியம் உப தலைவர் ஏ.லோரன்ஸ் நிதிச் செயலாளர் விஸ்வநாதன் புஸ்பா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
” வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக அதனை ஏற்பாடு செய்தவர்கள் தரப்பில் எங்களுடன் கலந்துரையாடவில்லை என்றாலும் தொழிலாளர் நலன்சார்ந்து இந்த போராட்டம் நடைபெறுவதாலும் தொழிலார்களின் ஒற்றுமையையும் அவர்களுக்கு இடையே பிரிவினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவுமே மலையக மக்கள் முன்னணி என்ற வகையில் நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்க தீர்மானித்திருக்கின்றோம்.
மலையக மக்கள் முன்னணிக்கு போராட்டம் என்பது புதியவிடயமல்ல.நாம் பல போராட்டங்களை களத்தில் இருந்து முன்னெடுத்தவர்கள்.அந்த வகையில் எந்த ஒரு போராட்டமும் வெற்றி பெற வேண்டுமாக இருந்தால் அதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் ஆதரவும் தேவை. இதனை நாங்கள் நன்கு உணர்ந்தவர்கள்.” – என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார்.
