தோட்டத் தொழிலாளர்களின் 1700 ரூபா சம்பளம் தொடர்பில் தோட்ட முதலாளிமார்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவோம்.
சில முதலாளிமார் தனிப்பட்ட ரீதியில் இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளதுடன் பொது இணக்கப்பாடொன்றை எடுப்பதற்கு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம் என பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது;
தோட்டத் தொழிலாளர்களின் தற்போதைய சம்பளம் போதுமானதல்ல. அது அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளதுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் வரவு செலவுத் திட்டத்தில் அதனை வலியுறுத்தியுள்ளார்.இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நாம் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம்.அதேபோன்று தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரித்துள்ளோம்.
அந்த வகையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளோம். தொடர்ந்தும் பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகின்றோம்.பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் என்ற வகையில் நானும் நிதி பிரதியமைச்சர் அனில் ஜயந்தவும் இரண்டு அமைச்சுகளின் அதிகாரிகளும் இணைந்து தோட்ட நிர்வாக தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் தொடர்ந்தும் பேச்சு வார்த்தை நடத்துவோம். அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளோம்.தோட்ட முதலாளிமாருடன் நாம் நடத்திய பேச்சு வார்த்தையில் அவர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பிலும் அவர்கள் கருத்துக்களை முன்வைத்தனர். அத்துடன் தனியார் துறையினரின் சம்பளத்தை அதிகரிக்க முடியுமானால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது முடியாத காரியமல்ல நாம் நம்புகின்றோம்.
நாம் எமது தரப்பில் அவர்களிடம் விடயங்களை முன்வைத்த போது, அரசாங்கம் என்ற வகையில் தோட்டப் பகுதி வீதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்குமானால் அதேபோன்று தோட்ட வீடுகளையும் நிர்மாணித்து வழங்குவதனால் ஏகாதிபத்தியவாதிகளின் காலத்தில் தோட்டங்களை நிர்வாகித்தவர்களே வீடுகள், வீதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் மேற்கொண்டனர். அந்த திட்டங்களை மக்களின் வரிப்பணத்திலிருந்து அரசாங்கமே மேற்கொள்ளுமானால் அதைவிட மேலதிகமாக நாம் தோட்ட நிர்வாகங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியும்.
குறிப்பாக சில தோட்ட நிறுவனங்கள் தனிப்பட்ட ரீதியில் 1700 ரூபா சம்பளத்தை வழங்குவதற்கு எம்மிடம் இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளன. எம்மால் அதனை வழங்க முடியும் எனினும் பொதுவான ஒரு இணக்கப்பாட்டுக்கு அனைவரும் வருவது தற்போதைய தேவையாக உள்ளது என அவர்கள் தெரிவித்தனர். அவர்களின் ஒத்துழைப்புடன் அந்த வேலைத திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.அதேவேளை தோட்டத் தொழிலாளர்களுக்கான காணி உரிமைகள் வழங்கப்படும். இதற்கு குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.