முடக்க நிலைமைக்கு மத்தியிலும் அவசர அவசரமாக தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் ஆராயப்பட்டுவருவது ஏன்? நெருக்கடி நிலைமையைப் பயன்படுத்தி சிறுபான்மையின மக்களின் அரசியல் இருப்புக்கு ஆப்பு வைத்து, அவர்களை அடக்கி ஆள்வதற்கான நயவஞ்சக நடவடிக்கையில் மற்றுமொரு அங்கமாகக்கூட இது இருக்கலாம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் சுட்டிக்காட்டினார்.
கண்டியில் இன்று (11.09.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் வேலுகுமார் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு,
” நாடு முடக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிவாரணம் வழங்கி மக்களை பாதுகாக்க வேண்டிய அரசாங்கம், மக்களை கைவிட்டுள்ளது. இதனால் எதிர்காலம் பற்றி மக்களுக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலைமையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு பல பாதகமான தீர்மானங்களை இந்த அரசாங்கம் அவசர அவசரமாக மேற்கொண்டுவருகின்றது.
குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி திட்டத்தில் முன்னுரிமை வழங்குமாறு பரிந்துரைக்கப்பட்டது. அதனை முறையாக – முழுமையாக செய்யாமல் 30 முதல் 59 வயது பிரிவினருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டது. கொரோனாவால் இன்று நாளாந்தம் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். அவர்களில் பலர் தடுப்பூசி பெறாதவர்கள். எனவே, 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி முழுமையாக வழங்கப்பட்டிருந்தால் மரண வீதத்தை குறைத்திருக்கலாம். ஏனையோருக்கு தடுப்பூசி வழங்கப்படக்கூடாது என நான் குறிப்பிடவில்லை. எதையும் உரிய திட்டமிடலுடன் செய்ய வேண்டும்.
நுகர்வோர் அதிகார சபை சட்டம், அனர்த்த முகாமைத்துவ சட்டம் போன்றன கைவசம் இருக்கையில் அவசரகால சட்டத்தைக்கொண்டுவந்து, இராணுவ ஆட்சிக்கான ஒத்திகையையும் இந்த அரசாங்கம் பார்த்துக்கொண்டிருக்கின்றது.
இதற்கிடையில் கறுப்பு பணத்தை சட்டபூர்வமாக்கும் நோக்கில் பாராளுமன்றத்தில் சட்டமூலமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மத்திய வங்கி ஊடாக மேற்கொள்வதற்கு மத்திய வங்கி ஆளுநராக தமது விசுவாசியை நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இப்படி பல பாதகமான விடயங்களை செயற்படுத்திவரும் அரசாங்கம் மறுபுறத்தில், சிறுபான்மையின மக்களை அடக்கி, ஆளும் நயவஞ்சக திட்டத்தையும் கைவிடவில்லை என்றுதான் தெரிகின்றது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுத்தல், மக்களுக்கு நிவாரணத் திட்டங்களை முன்னெடுத்தல் உட்பட பல திட்டங்களை அவசரமாக செய்யவேண்டியுள்ள நிலையில், தேர்தல் முறை மாற்றத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதன் நோக்கம் என்னவென்று புரியவில்லை.
சிலவேளை சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்ககூடிய விதத்திலான, அவர்களின் பிரதிநிதித்துவத்தை குறைத்து அரசியல் இருப்புக்கு வேட்டு வைக்கும் விதத்திலான நகர்வுகள்கூட முன்னெடுக்கப்படலாம். ஊடகங்களிலும் கொரோனா பற்றிய செய்திகளே அதிகம் வெளிவருகின்றன. மக்கள் பிரதிநிதிகளாகிய நாமும் மக்களின் சுகாதார பாதுகாப்பு பற்றியே முன்னுரிமை வழங்கிவருகின்றோம். எனவே, தேர்தல் முறைமை மாற்றம் பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்படுவதில்லை. இதனை சாதகமாக பயன்படுத்தி தமது சதித்திட்டத்தை ஆளுந்தரப்பு நிறைவேற்றக்கூடும்.
தேர்தல் முறைமை மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றுள்ள ஆளுங்கட்சியின் மலையக பிரதிநிதி, கூட்டங்களில் பங்கேற்பதில்லை. நகர்வுகள் பற்றி ஆராய்வதும் இல்லை. எனவே, தேர்தல் முறைமை மாற்றம் குறித்தும் விழிப்பாகவே இருப்போம்.” -என்றார்.