சுதந்திரக்கட்சிக்கு மூன்று அமைச்சுகள்! பிள்ளையானுக்கும் பதவி!!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மூன்று உறுப்பினர்கள் அங்கம் வகிக்கவுள்ளனர்.

கட்சி தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபாலடி சில்வா, மஹிந்த அமரவீர ஆகிய மூவருக்கே அமைச்சுப்பதவிகள் வழங்கப்படவுள்ளன.

அத்துடன், தயாசிறி ஜயசேகரவுக்கு இராஜாங்க அமைச்சு பதவியொன்று வழங்கப்படலாம் என தெரியவருகின்றது.

அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் நாளை கண்டியில் பதவியேற்கவுள்ளனர்.

அதேவேளை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையானுக்கும் அமைச்சு பதவியொன்று வழங்கப்படவுள்ளது. இராஜாங்க அமைச்சு பதவியே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.

இதேவேளை பிள்ளையானுக்கு சட்டரீதியாக அனுமதி வழங்கி அவரை கண்டியில் நடைபெறும் அமைச்சரவை பதவியேற்பில் பங்கேற்க செய்வது தொடர்பில் நேற்று கொழும்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

Related Articles

Latest Articles