ஜனநாயக ஆட்சி இயலுமை அநுரவுக்கு இல்லை!

ஜனநாயக ஆட்சி செய்யும் இயலுமை அநுரவிற்கு கிடைக்காது என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் கூறியவை வருமாறு,

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று மக்களின் ஆதரவை கோரியிருக்கிறார். மக்களும் பெருமளவில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க முன்வந்திருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளினதும் மக்களினதும் நம்பிக்கையை ஜனாதிபதி உறுதி செய்திருக்கிறார்.

இதுவரையில் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே முன்மொழிந்திருக்கிறார். நாட்டின் கல்வித்துறைக்கும் கல்வியற் கல்லூரி போன்ற விடயங்களை அறிமுகப்படுத்தினார். இவ்வாறு இலங்கையில் புதுமையான முயற்சிகளை சாத்தியமாக்கிக்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே முடியும்.

தவறியேனும் இந்த நாட்டில் மக்கள் விடுதலை முன்னணி ஆட்சிக்கு வந்தால் மூன்று எம்.பிக்களை வைத்துக்கொண்டு ஜனநாயக ஆட்சி செய்யும் இயலுமை அநுரவிற்கு கிடைக்காது. எனவே அவர் தன்னிச்சையான அதிகாரங்களுடன் செயற்பட முயற்சிக்கிறாரா என்ற கேள்விக்குறி உள்ளது. எனவே நாட்டில் ஆட்சி அதிகாரத்தை செயற்படுத்தக்கூடிய பாராளுமன்ற அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமே உள்ளது.

இம்முறை பெருமளவான புதிய வாக்காளர்கள் பதிவாகியிருக்கும் நிலையில் நாட்டின் எதிர்காலத்தை சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த;

“2022 ஆம் ஆண்டில் நாட்டில் பல பிரச்சனைகள் காணப்பட்ட போது தனது கட்சி உறுப்பினர்கள் கைகொடுக்காமையினால் மாற்றுக் கட்சி வேட்பாளர்களுடன் வேலை செய்ய வேண்டிய நிலைமை ஜனாதிபதிக்கு வந்தது. நாட்டின் நிலையை கருத்தில் கொண்டு அந்த சவாலையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

சில அரச ஊழியர்களை பணிப் புறக்கணிப்புக்களுக்கு மாத்திரம் பயன்படுத்திவிட்டு கைவிட்டு விடுவர். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு செய்ய வழி செய்திருக்கிறார். இன்று பங்களாதேஷில் தற்காலிக அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அங்கு வரிசை யுகம் தோன்றியுள்ளது. இதே கஷ்டங்களை இலங்கையும் அனுபவித்தது. அவ்வாறானதொரு கஷ்டத்தை கடந்தே இன்றைய நிலைக்கு வந்திருக்கிறோம். இந்தியா பங்களாதேஷ் போன்ற நாடுகளிடம் பெற்றக் கடனையும் நாம் திருப்பிச் செலுத்தியிருக்கிறோம்.” என்றார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க;

“கொவிட் காலத்தில் அப்போதைய அரசாங்கம் வரிச் சுமைகளை குறைத்தமையின் காரணமாகவே இலங்கை நெருக்கடிக்குள் சிக்கியது. அதேபோல் இரசாயன உர இறக்குமதிக்குத் தடை விதித்தமையினால் இலங்கையின் விவசாய உற்பத்திகள் முற்றாகச் சரிவைக் கண்டன. அதனால் புதிய வகையிலான விளைச்சல்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளும் பாதிப்பை எதிர்கொண்டன.

அந்த நிலையிலிருந்து மீளவே நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் பயணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனாலேயே நாட்டின் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடுகளிலிருந்து மீண்டு வர முடிந்தது. குறிப்பாக சர்வதேச நாடுகள் மத்தியில் இலங்கை மீதான நம்பிக்கை ஏற்பட்டது. அதனால் சுற்றுலாத்துறையும் மூச்சுவிட ஆரம்பித்தது.

அதனால் அப்போது ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்ட நிதி முகாமைத்துவம் உள்ளிட்டச் செயற்பாடுகள் தேசிய பொருளாதாரத்தை நிலைப்படுத்தியிருந்தது. அதன்படி இப்போது துரித அபிவிருத்திக்கான வேலைத்திட்டம் அவசியப்படுகிறது. இவ்வருடத்தின் இறுதியில் சுற்றுலா பயணிகள் வருகையை 25 இலட்சமாக அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி தயாரித்திருக்கிறார்.

அதேபோல் எமது இறக்குமதிகளுக்கு செலுத்தவே வருமானம் போதுமாக இருப்பதால் ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்கி அதிக வருமானத்தை ஈட்டும் திட்டங்களையும் அவர் தயார்படுத்தியுள்ளார். தற்போதும் இலங்கை பல நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் கைசாத்திட்டுள்ளது. மேலும் மீள் புதுபிக்கக்கூடிய வலுசக்தி உற்பத்தியை ஆரம்பித்துள்ளோம். இவற்றை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய ஒரே தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே இருப்பதாலேயே அவரோடு இன்னும் ஐந்து வருடங்களுக்கு இந்த நாடு முன்னோக்கி செல்ல வேண்டுமென வலியுறுத்துகிறோம்.” என்றார்.

Related Articles

Latest Articles