ஜனாதிபதி அநுரவின் இந்திய மற்றும் சீன விஜயங்கள் தொடர்பில் கேள்விக்கணைகளை தொடுக்க தயாராகும் எதிரணி

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய மற்றும் சீன பயணங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்விக்கணைகளைத் தொடுப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தயாராகிவருகின்றதென அறியமுடிகின்றது.

ஜனாதிபதியின் இந்திய பயணத்தின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடக சந்திப்பை நடத்தி வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெளிவுபடுத்தி இருந்தார்.

இலங்கை அரசாங்க ஊழியர்களுக்கு இந்தியாவில் பயிற்சி உட்பட இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டுமே இவ்விஜயத்தின்போது கைச்சாத்திடப்பட்டன என அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

அதேபோல எட்கா ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுகளை முன்னெடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டது எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், எட்காவுக்கு எதிராக முன்னர் போர்க்கொடி தூக்கியிருந்த ஜே.வி.பியினர் அதனை ஏற்க தயாராகிவருகின்றது என எதிரணிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. எட்காவை மறைமுகமாக ஏற்கும் வகையிலேயே இலங்கை, இந்திய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மறுசீரமைப்பதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே எட்கா ஒப்பந்தம், இலங்கை, இந்திய இணைப்பு திட்;டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர், அரசாங்கத்திடம் நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பவுள்ளார்.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளை சட்டத்தின் 27/2 இன்கீழ் அவர் இது பற்றி கேள்வி எழுப்பக்கூடும். அவ்வாறு இல்லாவிட்டால் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை முன்வைக்கப்படக்கூடும். நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக் கூட்டத்தில் இது பற்றி இறுதி முடிவெடுக்கப்படும்.

ஜனவரி முற்பகுதியில் ஜனாதிபதி சீனாவுக்கு செல்கின்றார். அவ்விஜயம் சம்பந்தமாகவும் கேள்விகள் எழுப்படவுள்ளன.

Related Articles

Latest Articles