” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், எனக்கும் இடையிலான உறவு இன்றும் தொடர்கின்றது. எமது மக்களின் நன்மைக்காக அவரை பயன்படுத்திக்கொள்ள தயாராகவே இருக்கின்றோம்.” – என்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா அம்மான் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தேர்தல் குறித்து நாம் இன்னும் முடிவெடுக்கவில்லை. தமிழர் தரப்பில் இருந்து சிறந்த கூட்டணி வருமாக இருந்தால் இணைந்துபோட்டியிட தயாராக இருக்கின்றோம்.
இரண்டு தடவைகள் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் சென்றேன். பின்னர் சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி, இன்று நாங்கள் தனித்துவமாக பயணித்துக்கொண்டிருக்கின்றோம். எதிர்காலத்தில் அவர்களுடன் (ராஜபக்ச அணி) இணைந்துபயணிக்கும் எண்ணம் இல்லை.
தென்னிலங்கையில் உள்ள கட்சிகளின் தலைவர்களுடனும் பேச்சு நடத்திவருகின்றோம். ஜனாதிபதியும் நானும் மிகவும் நெருக்கமானவர்கள், அது அனைவருக்கும் தெரிந்த விடயம். அந்த உறவு இன்றும் இருக்கின்றது. எங்களுடைய மக்களின் நன்மைக்காக அவரை பயன்படுத்திக்கொள்ள தயாராகவே இருக்கின்றோம்.” – என்றார்.










