ஜப்பானில் யென் மதிப்பு பலவீனமடைந்துள்ள நிலையில் பொருட்களின் விலை அதிகரித்து அந்த நாட்டில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம் அதிகரித்துள்ளது.
முக்கிய நுகர்வோர் பணவீக்கம், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஒக்டோபரில் 3.6 வீதம் அதிகரித்துள்ளது. 1982 பின் பணவீக்கம் வேகம் கண்டுள்ளது.
எனினும் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில் ஜப்பானின் பணவீக்க விகிதம் குறைவாகும்.
ஜப்பான் நாணயத்தின் பெறுமதி கடந்த ஒக்டோபரில் 32 ஆண்டுகளில் இல்லாத அளவு வீழ்ச்சி கண்டு அமெரிக்க டொலர் ஒன்றுக்கு இணையாக 151 யென் என சரிந்தது. அது தொடக்கம் மீட்சிபெற்ற யென் டொலருக்கு நிகராக 140 யென் ஆக பதிவானது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் அதிகரித்திருக்கும் எரிபொருள் விலையை சமாளிப்பது உட்பட பொருளாதார ஊக்கப் பொதிக்கு 260 பில்லியன் டொலர்கள் செலவிடப்படுவது குறித்து ஜப்பான் அரசு கடந்த மாதம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.