” பிள்ளையான் தவறிழைத்திருந்தால் தண்டனை வழங்கலாம். ஆனால் டயஸ்போராக்களை திருப்திப்படுத்துவதற்காக செய்யாத தவறுக்காக அவரை தண்டிக்க முற்பட்டால், அதற்கு எதிராக நாம் போராடுவோம்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு.
” பிள்ளையான் கைது செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸார் ஒரு காரணத்தையும், பொலிஸ் அமைச்சர் வேறொரு காரணத்தையும் கூறுகின்றனர்.
டயஸ்போராக்களின் தேவைக்கேற்ப கருணா அம்மானுக்கு எதிராக பிரிட்டனில் தடை விதிக்கப்பட்டது. புலிகள் அமைப்பை தோற்கடிப்பதற்கு இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியதாலேயே அவருக்கு இப்படி நடந்துள்ளது.
அதேபோல புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறி, ஜனநாயக வழிக்கு வந்து புலிகளை தோற்கடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையானையும் கைது செய்துள்ளனர். வேறு நபர்களின் தேவைக்கேற்பவே பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது தெளிவாகின்றது.
பிள்ளையான் செய்த சேவை தொடர்பில் கம்மன்பிலவுக்கு தெரியும். கம்மன்பில எமது அணியில் இருந்தவர். எனவே, அவருக்காக கம்மன்பில முன்னிலையானது சரியான முடிவே.” – என்றார்.
