பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டிக்கோயா இன்வெரி தோட்டத் தொழிலாளர்கள் இன்று (13/07/2023) முதல் பணி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்வெரி தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு தொழில் ரீதியான பிரச்சினைகள் குறித்து தோட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு பலமுறை கொண்டு வந்த போதும் தோட்ட நிர்வாகம் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தொழிலாளர்கள் இந்தப் பணி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தத் தோட்டத்தில் செயல்படுகின்ற சகல தோட்டத் தொழிற்சங்கங்களின் தோட்டத் தலைவர்களும் தாம் முன்னெடுக்கின்ற போராட்டம் குறித்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் அட்டன் தலைமை பணிமனையில் இன்று முறைப்பாடு செய்தனர்.
இந்த முறைப்பாட்டினை தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப், தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளர் சோ.ஸ்ரீதரன், பணிமனை உத்தியோகத்தர்களான திருமதி.சரிதா,திருமதி.உஷா ஆகியோரிடம் முன் வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதன் பின்பு தோட்ட கமிட்டித் தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்க
இன்வெரி தோட்ட பணிநிறுத்தப் போராட்டம் தொடர்பில் அட்டன் தொழில் ஆணையாளருடன் பேச்சுவார்த்தை ஒன்றை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
