இ.தொ.காவின் உபத் தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை
கொவிட் தொற்றின் திரிபாக உலகை உலுக்கிவரும் டெல்டா (Delta Variant) தொற்றுக்கு உள்ளாகுபவர்கள் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டு வருவதால் கொவிட் தடுப்பூசிகளை செலுத்தப்பட்டிருந்தாலும் சுகாதார வழிகாட்டல்களை இறுக்கமாக பின்பற்றி அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளரும் இ.தொ.காவின் உபத் தவைருமான செந்தில் தொண்டமான் மலையக மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளரும் இ.தொ.காவின் உபத் தவைருமான செந்தில் தொண்டமான் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கையில் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளதாவது,
கொவிட் வைரஸ் தொற்று நெருக்கடியால் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதி முதல் முழு உலக நாடுகளும் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளன. இலங்கையும் கொவிட் நெருக்கடியால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. கொவிட் -19 வைரஸை விட டெல்டா (Delta Variant) வைரஸின் வீரியமானது அதிகமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
கொவிட் தொற்றிலிருந்து திரிபடைந்து உருவாகியுள்ள டெல்டா வைரஸானது உலக நாடுகளை தற்போது உலுக்கி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, மேற்குலக நாடுகள் உட்பட சீனாவில் கூட டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அண்மையில் அமெரிக்காவில் இயங்கும் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் (U.S. Centers for Disease Control and Prevention) நடத்தயிருந்த ஆய்வில் சிக்கன் பாக்ஸை போன்று தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாதவர்களுக்கும் டெல்டா வைரஸ் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
அரசாங்கம் டெல்டா வைரஸ் பரவுவதை தடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருக்கின்ற போதிலும், பொதுமக்கள் டெல்டா வைரஸின் ஆபத்தை புரிந்துகொண்டு இதிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள விழிப்புணர்வுடன் செயற்பட்டால் மாத்திரமே இந்த நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.
டெல்டா வைரஸானது மரணங்களை அதிகமாக ஏற்படுத்தும் ஆபத்தானதென சான்றுகள் உள்ளதாகவும் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் கூறியுள்ளது.
இலங்கையில் டெல்டா தொற்றாளர்கள் அதிகமாக பதிவாகி வருவதால் தற்போதைய சூழ்நிலையின் ஆபத்தை உணர்ந்து ,அநாவசிய பயணங்களை தவிர்த்து, சுகாதார அமைச்சால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை இறுக்கமாக கடைப்பிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளாதவர்கள் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள கிடைக்கும் சந்தர்ப்பத்தை உரிய வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.