இரத்தினபுரி, பலாங்கொடையைச் சேர்ந்த பாக்கியராஜா முரளிதரன் என்ற 9 வயது மாணவன் சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
ஆட்டிசம் என்ற நரம்பியல் குறைப்பாட்டால் இவர் பாதிக்கப்பட்டிருந்தாலும், குறைபாடுகள் – தடைகளையெல்லாம் கருத்திற்கொள்ளாமல் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
உலக வரைபடத்தில் உலக நாடுகளின் பெயர்கள், நாடுகளில் பேசப்படும் மொழிகள், உலக அரசியல் தலைவர்கள், அந்த நாடுகளின் விளையாட்டுகள் ஆகியவற்றைக் கூறுவது, பொது அறிவு, தமிழ், சிங்கள, ஆங்கில மொழிப் பரீட்சயம் ஆகியவற்றில் தனது திறமைகளை வெளிப்படுத்தி முரளிதரன் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.
Most Variety of Things Reciting By A Multiple Disorder (Autism) Kid என்ற தனிநபர் சாதனையைப் படைத்து முரளிதரன் சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
உலக அளவில் லட்சக் கணக்கான பிள்ளைகள் ஆட்டிசம் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆட்டிசம் என்பது மூளை, தகவல்களைப் பயன்படுத்திப் புரிந்துகொள்ளும் திறனைத் தடுப்பது. பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களைச் சரியாகப் பயன்படுத்த முடியாமல், மனிதர்களின் நடவடிக்கைகள் மாறிப்போவதே ஒட்டிசம் எனப்படும்.
ஒட்டிசம் என்பது ஒரு குறைபாடுதானே ஒழிய, நோயல்ல. இந்தக் குறைபாட்டைச் சீக்கிரமாகக் கண்டறிவதன் மூலம் குழந்தைகளிடம் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டுவர முடியும். இவ்வகைக் குறைபாடுள்ள குழந்தைகள் அதீத புத்திசாலியாக இருக்கவும் வாய்ப்புண்டு. புத்திசாலித்தனத்துக்கும் இக்குறைபாட்டுக்கும் தொடர்பில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உலக சாதனையாளர்களான அல்பிரட் ஐன்ஸ்டீன், எலான் மஸ்க், பிள் கேட்ஸ், ஹான்ஸ் கிறிஸ்டீன் அண்டசன், சார்ள்ஸ் டாவின் தங்களின் சிறு வயத்தில் ஒட்டிசம் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
