ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் செந்தில் தொண்டமானின் நெருங்கிய நண்பர்கள்?
தமிழகத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை இன்று சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டது.
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த தி.மு.க தலைவர் மு.கருணாநிதியின் அமைச்சரவையில் அங்கம் வகித்த துரைமுருகன், நேரு, பொன்மூடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தற்போது ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையிலும் பிரதான அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
இந்நிலையில், ஸ்டாலினின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள முக்கிய தலைவர்களுடன் இ.தொ.காவின் உபத் தலைவரும் பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் நீண்டகாலமாக நெருங்கிய உறவை பேணி வருபவராக இருக்கிறார்.
கடந்த 2012ஆம் ஆண்டு காங்கிரஸின் தலைவர் சோனியா காந்தியுடன் இ.தொ.கா மேற்கொண்டிருந்த சந்திப்பில் மலையக மக்களுக்கு 4000 வீடுகளை கட்டித்தருவதற்கான உறுதிமொழியை அவர் வழங்கியிருந்தார். இந்த சந்திப்பு இடம்பெற பிரதான கதாப்பாத்திரம் வகித்தவராக செந்தில் தொண்டமான் இருந்திருந்தார்.
அதேபோன்று முன்னைய ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். தலைமையிலான தமிழக அரசுடனும் நெருங்கிய உறவுபாலமொன்று இ.தொ.காவுக்கு இருந்தது. இதன்போதும் செந்தில் தொண்டமான் பிரதான கதாப்பாத்திரம் வகித்தவராகும்.
இந்நிலையில், தற்போது அமையப்பெற்றுள்ள ஸ்டாலினின் அமைச்சரவையில் செந்தில் தொண்டமானுடன் நெருங்கிய உறவை பேணும் பலர் இடம்பெற்றுள்ளனர். இந்த உறவுபாலத்தை பயன்படுத்தி இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களான மலையக மக்களின் எதிர்கால அரசியல் இருப்புக்கான நகர்களை மேற்கொள்ளக் கூடிய சூழல் உள்ளது. அதேபோன்று பொருளாதார ரீதியான நன்மைகள் மற்றும் கலாசார ரீதியான ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் உள்ளது.
இ.தொ.காவில் தற்போதுள்ள தலைவர்களில் அனுபவமிக்க மூத்த தலைராகவுள்ள செந்தில் தொண்டமான், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மலையக மக்களின் தொப்புள்கொடி உறவாகவுள்ள தமிழகத்துடனான உறவை பலப்படுத்துவரா என பல தரப்பினரினதும் பேசுபொருளாகவுள்ளது.
– நன்றி மலைநாடு