நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக்கூடிய இஞ்சியை தினமும் சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று முன்னோர்கள் கூறுவதுண்டு.
இதில் நிறைய நார்ச்சத்துக்கள், விட்டமின்கள், நோயெதிர்ப்பு திறன் உள்ளது. இஞ்சியின் சுவை பிடிக்காது என்பதால் பலரும் இதனை அரிதாகவே சமையலில் பயன்படுத்துகின்றனர். ஆனால், அனைத்து உணவு வகைகளிலும் ஒரு சிறு துண்டு இஞ்சி சேர்ப்பது அவசியம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
இஞ்சியை உணவில் தினமும் சேர்க்க வேண்டியதன் 10 காரணங்கள்:
► இஞ்சி வலுவான கார சுவை கொண்டது. ஆனால், தேநீருடன் சேர்க்கும்போது இனிப்பு சுவையுடன் சமநிலை ஆகிவிடும். தேநீருக்கு ஒரு தனிப்பட்ட சுவையை அளிப்பதுடன் ஆரோக்கியத்தையும் தருகிறது. தீர முடியாத தலைவலி இருப்பவர்கள் ஒரு இஞ்சி டீ அருந்தி பாருங்கள். கொஞ்சமாவது தலைவலி குறைந்துவிடும்.
► மாதவிடாயின்போது அல்லது அதிக மதிய உணவு இரவு உணவிற்குப் பிறகு வயிற்றுப்பகுதி விரிவடைவது போன்று உணர்ந்தால் இஞ்சி அதனை சரிசெய்யும் வல்லமை உள்ளது.
► வயதானவர்கள் மட்டுமின்றி, நடுத்தர வயதினரும் இன்று மூட்டு வலியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். உணவில் இஞ்சி சேர்த்துக்கொள்வது மூட்டுவலியைக் குறைக்கும்.
► மாதவிடாய் வலிக்கு எதிராக நிறைய மருந்துகள் உள்ளன. ஆனால், மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்ள முடியாதவர்கள் ஒரு சிறிய துண்டு இஞ்சியை சாப்பிடுங்கள். தசைப்பிடிப்பைக் குறைத்து நன்றாக உணர வைக்கும்.
► ஆரோக்கியமற்ற உணவை சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால், நீரிழிவு நோய் உருவாகலாம். உணவில் இஞ்சி சேர்ப்பது இதனை ஓரளவு தடுக்க உதவும்.
► இஞ்சி டீ குடிப்பது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குகிறது. அதுபோல காய்ச்சல் உள்ளிட்ட உடல் தொந்தரவுகள் ஏற்படும்போது இஞ்சி டீ குடித்தால் காய்ச்சல் குறையும். பல்வேறு நோய்களையும் தடுக்கும்.
► இதய நோய்கள் வராமல் தடுக்கவும் ரத்த ஓட்டத்தை பாதுகாக்கவும் இஞ்சியை உணவில் சேர்க்கலாம்.
► செரிமானப் பிரச்சினைகள் இருப்பின் இஞ்சிச் சாறு சிறிது அருந்துங்கள்.
► மலச்சிக்கல், வாயுத்தொல்லை, வயிற்றுவலிக்கு இஞ்சி சிறந்த மருந்து.
► இஞ்சியை தனியே சாப்பிட வேண்டாம். காய்கறி சூப், சிக்கன்/மட்டன் சூப் செய்யும்போது அதில் தேவைப்படும் இஞ்சியை சேர்க்கலாம். பொதுவாக சமையலில் பயன்படுத்தும் மசாலாவுடன் சிறிது இஞ்சி பேஸ்ட் சேர்க்கலாம். அதேநேரத்தில் அதிகம் பயன்படுத்தினால் சுவை கெட்டுவிடும். எனவே, அளவோடு பயன்படுத்துங்கள்.