‘திரவப் பால் கொள்வனவில் நிலவும் முரண்பாடுகளை உடன் தீர்க்கவும்’ – ஜனாதிபதி பணிப்பு

திரவப் பால் கொள்வனவுகளில் காணப்படும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் கால்நடை, பண்ணை ஊக்குவிப்பு, பால் மற்றும் முட்டை கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் டீ.பீ.ஹேரத் ஆகியோருக்குப் பணிப்புரை விடுத்தார்.

நாரஹேன்பிட்டியில் உள்ள Milco தொழிற்சாலைக்கு இன்றைய தினம் (25) கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட போதே, ஜனாதிபதி இவ்வாறு பணிப்புரை விடுத்தார்.

திரவப் பாலைக் கொள்வனவு செய்யும் போது, மாவட்ட மட்டத்திலான விலை வேறுபாடுகள் தொடர்பிலும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது விசேட அவதானம் செலுத்தினார்.

பால் பண்ணையாளர்களிடம் இருந்து பாலைக் கொள்வனவு செய்து நிறுவனத்துக்குக் கொண்டு வருவதில் இடைத்தரகர்களால் ஏற்படும் முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக, முழு செயற்பாடுகளும் முழுமையாகக் கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் பால் பண்ணையாளர்களுக்கு சரியான விலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பால் பண்ணையாளர்களை மேம்படுத்துதல் மற்றும் திரவப் பால் பாவனையை ஊக்குவிக்கும் நோக்கிலேயே ஜனாதிபதி அவர்கள் இந்தத் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளார். நுகர்வோருக்குச் சுமையை ஏற்படுத்தும் வகையில், தற்போதுள்ள விலைகளில் மாற்றம் செய்யக்கூடாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தொழிற்சாலை வளாகத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள், திரவப் பாலைச் சேகரித்தல் முதல் பால் பொருட்களை உற்பத்தி செய்தல் வரையான அனைத்துச் செயற்பாடுகளையும் முழுமையாகக் கண்காணித்தார்.

தேசிய பால் சபையானது, 1956இல் நிறுவப்பட்ட நிலையில், 1986இல் Milco பிரைவேட் லிமிடெட் ஆக மாற்றம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக பேஸ்டுரைஸ் செய்யப்பட்ட பால் உற்பத்திக்கு மட்டுப்படுத்தப்பட்ட மில்கோ நிறுவனம் தற்போது பால் மற்றும் பால் பொருட்களான யோகட், ஐஸ்கிரீம், வெண்ணெய், நெய், தயிர் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் போன்றவற்றை உள்ளடக்கிய உற்பத்தி செயல்முறைகளாக விரிவுபடுத்தியுள்ளது.

இந்நிறுவனத்துக்கு உரித்தான அம்பேவெல, திகன, பொலன்னறுவ மற்றும் நாரஹேன்பிட்டி ஆகிய நான்கு தொழிற்சாலைகளில், சுமார் 1,500 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவற்றின் தினசரி பால் கொள்ளளவு 700,000 லீற்றராக உள்ளதோடு, தற்போதைய பால் சேகரிப்பு 120,000 லீற்றராக வரையறுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனுக்காகவே இந்நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக, நிறுவனத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டென்மார்க் அரசாங்கத்தின் 600 மில்லியன் யூரோ முதலீட்டில், படல்கம பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பால் தொழிற்சாலையின் செயற்பாடுகள், இவ்வாண்டு செப்டெம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் (NLDB) கீழ் பயன்படுத்தப்படாத காணிகளை மேய்ச்சல் தரவைகளாகப் பயன்படுத்துமாறும் திகன, அம்பேவெல, பொலன்னறுவ மற்றும் படல்கம ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகளின் பிரதான கேந்திர நிலையமாக நாரஹேன்பிட்டி மில்கோ தொழிற்சாலையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

ஒரு கிலோகிராம் பால்மா உற்பத்திக்கு, 8.5 லீற்றர் திரவப் பால் தேவைப்படுகிறது. இதில் 45 கோப்பை பால் மட்டுமே தயாரிக்க முடியும். இருப்பினும், 2.5 லீட்டர் திரவப் பாலில் அந்தத் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலைமையை உணர்ந்து, திரவப் பாலை அருந்துவதற்கு மக்களை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, இராஜாங்க அமைச்சர் டீ.பீ.ஹேரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, இராஜாங்க அமைச்சின் செயலாளர் வருண சமரதிவாகர, மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுக பெரேரா மற்றும் பொது முகாமையாளர் சுதத் முனசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles