திருகோணமலையில், இதுவரை அறியப்படாத – புராதனமான – சிவாலய இடிபாடுகள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வரலாற்று ஆய்வாளர் மருத்துவர் அருமைநாதன் சதீஸ்குமார் மற்றும் அவரது நண்பர்களின் முயற்சியில் திருகோணமலையில் இதுவரை அறியப்படாத இந்தச் சிவாலய இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருகோணமலை நகரிலிருந்து சுமார் 5 மணித்தியால பயணத்தின் பின்னர் அடர்ந்த வனப்பகுதியில் வவுளாமடு என்னுமிடத்தில் அத்திபாரமட்டத்தில் இடிந்த நிலையிலுள்ள சிவன் கோயில் எச்சங்கள் காணப்படுகின்றன.
அதைவிட ஆங்காங்கே சிதைக்கப்பட்ட நிலையில் இரண்டு சிவலிங்கங்கள், கருங்கற் பொழிவுகள், பாரிய கருங்கற்றூண்கள், கருங்கல் மேடை, தூண்தாங்கு கற்கள் என்பனவும் இப்பகுதியில் உள்ளன. பயணத்தின் போது ஆங்காங்கே காட்டு யானைகளின் நடமாட்டத்தை அதிகளவில் அவதானிக்க முடிந்தது.
இவ்விடம் மாவில் ஆற்றுக்கு அப்பால் சின்னவில், அதற்கும் அப்பால் பொலநறுவையை ஒட்டிய எல்லையில் மகாவலி நதிக்கரையில் அமைந்துள்ளது.
யானைகளுக்கு தப்பி இவ்விடத்தை அடைந்து, ஒரு மணித்தியால தேடலுக்குப் பின்னரே இச்சிவாலய இடிபாடுகள் கண்களில் பட்டது. இக்கோயில் சுற்றாடலில் மக்கள் குடியிருப்புகள் இருந்ததற்கான அடையாளங்கள் பெருமளவில் காணப்படுகின்றன.