திருகோணமலையில் அமைதியின்மை ஏற்பட இடமளிக்க முடியாது. சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, நாடாளுமன்றத்தில் இன்று விளக்கமளித்தார்.
திருகோணமலை கடற்கரையில் பௌத்த பிக்குகளால் அனுமதியின்றி விகாரை அமைக்க முற்பட்டதால் அங்கு நேற்றிரவு ஏற்பட்ட பதற்ற நிலைமை தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, நாடாளுமன்றத்தில் இன்று விளக்கமளித்தார்.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“ குழப்பம் ஏற்பட்டால் புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படக்கூடும் என தகவல் கிடைத்தது. இதனையடுத்து பொலிஸார் சிலையை அங்கிருந்து அகற்றி, சிலைக்குரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தினர்.
குறித்த புத்தர் சிலையை விகாரையிலேயே இன்று மீள வைக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அப்பகுதியில் சட்டவிரோதமாக சிற்றுண்டிச்சாலையொன்று நடத்தப்பட்டுவருகின்றது என கரையோர பாதுகாப்பு திணைக்களத்தால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளனர். காணி குறித்து நீதிமன்றம் வழங்கும் உத்தரவுக்கமையவே நடவடிக்கை எடுக்கப்படும்.” எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.
