தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்கவுக்கும், இதொகாவினருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று ராஜகிரியவிலுள்ள தேர்தல் ஆணைக்குழுவில் இன்று நடைபெற்றது.
இச்சந்திப்பில் இதொகாவின் சார்பில் அதன் பிரதித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கணபதி கணகராஜ், உப தலைவர் ராஜமணி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
உள்ளாட்சித் தேர்தல், மாகாணசபைத் தேர்தல், பொதுத்தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் என்பவற்றின்போது நிராகரிக்கப்படும் வாக்குகள் தொடர்பில் இதொகா தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இச்சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட இதொகா பிரதித் தலைவர் கணபதி கணகராஜ் கூறியதாவது,
‘வாக்குச்சீட்டில் காணக்கடும் சில குளறுபடிகளும் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் அதிகரிப்புக்கு ஓர் காரணமாகும். சுயேச்சைக்குழுக்களுக்கு இலக்கம் வழங்கப்படுவதால் வாக்காளர்களுக்கு சிக்கல் ஏற்படுகின்றது. எனவே, இவ்வாறான விடயங்கள் தவிர்க்கப்பட்டு, நிராகரிக்கப்படும் வாக்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுன் தலைவரிடம் கோரிக்கை விடுத்தோம்.
எமது கோரிக்கை தொடர்பில் பரிசீலிக்கப்படும் எனவும், இது தொடர்பில் சட்டத்திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென்பதால் நாடாளுமன்றம் ஊடாகவே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், இந்த கோரிக்கை சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.” – என்று கணபதி கணகராஜ் கூறினார்.










