இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்களுக்கும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் மூவர் காயம் அடைந்துள்ளனர்.
இதொகாவின் ஆதரவாளர்கள் இருவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர் ஒருவருமே இவ்வாறு காயம் அடைந்துள்ளனர். மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று நடைபெற்ற இம்மோதல் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய அரசின் நிதி உதவியுடன் மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக ஆயிரத்து 300 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு, பொகவந்தலாவையில் இன்று காணி சுத்தப்படுத்தும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதன்போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் நால்வர், இதொகாவின் ஆதரவாளர்களை தாக்கியுள்ளனர் என பொகவந்தலாவை பொலிஸில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதொகாவின் தோட்ட தலைவருக்கு வேண்டிப்பட்டவர்களுக்கே வீடு வழங்கப்படுகின்றது எனவும், இதற்காக தோட்ட தலைவர் பணம் பெற்றுவருகின்றார் எனவும் குற்றஞ்சாட்டி பொகவந்தலாவ தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
பொகவந்தலாவ நிருபர் – எஸ். சதீஸ்
