மேதினம் தொழிலாளர்களுக்கு விமோசனத்தையும், விடிவையும் ஏற்படுத்தித் தரும் என்பதில் உறுதி கொண்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள தனது மேதினச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தனது செய்தியில் தெரிவித்துள்ளதாவது, உலகமெங்குமுள்ள தொழிலாளர்களால் கொண்டாடப்படும் மே தினத்தை இம்முறை மிகுந்த நம்பிக்கையோடு வரவேற்கின்றோம். மேதினம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள், வேலை நேர நிர்ணயம் என இன்னும் பல உரிமைகளை வென்றெடுத்த வெற்றி தினமாகும்.
இன்றைய சூழலில் மலையக பெருந்தோட்ட மக்கள் பொருளாதார நெருக்கடிகளாலும், விலைவாசி உயர்வினாலும் பல்வேறு இடர்பாடுகளை மக்கள் சொல்ல முடியாத அளவிற்கு இன்று எதிர்நோக்கி வருகின்றார்கள். எனவே, இந்த மேதினத்தை தொழிலாளர் வர்க்க சிந்தனையோடும், ஒருமித்த குரலாகவும் எமது பலத்தை எடுத்துக்காட்டுவோம்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காலம் காலமாக மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்துள்ளதுடன், சமகால தேவைகளுக்கேற்பவும் சேவையாற்றி வந்துள்ளது. எனவே, அனைத்து விதமான மாற்றங்களுக்கும், முன்னேற்றங்களுக்கும் எமது சமூக பணிகளை எமது சமூக பணிகளை முன்னெடுத்துச் செல்ல ஓரணியாய் ஒன்றிணைந்திடுவோம் என்றார் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான்.