மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள விவகாரத்தில் ஜனாதிபதி நேரில் தலையிட்டு வெகுவிரைவில் தீர்வை வழங்குவார் என்று தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதிப் தெரிவித்தார்.
கொட்டகலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம், மக்களுக்கு சேவை வழங்கும் நோக்கிலேயே உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைத்தோம். இதற்கு எவ்வித நிபந்தனையும் இன்றியே சில தரப்புகள் ஆதரவு அளித்தன. ஆட்சி அமைப்பதற்காக நாம் எந்தவொரு டீலிலும் ஈடுபடவில்லை. எவ்வித ஒப்பந்தமும் கிடையாது. மக்கள் வழங்கிய ஆணையை மதித்தே செயற்பட்டுவருகின்றோம்.
மலையகத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் நிச்சயம் விசாரணைகள் இடம்பெறும். எவரேனும் குற்றம் இழைத்திருந்தால் சட்டத்தின் பிரகாரம் நிச்சயம் தண்டனை வழங்கப்படும். எமது ஆட்சியில் குற்றவாளிகள் தப்ப முடியாது.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் வெகுவிரைவில் தலையிட்டு ஜனாதிபதி தீர்வை வழங்குவார். உள்ளக மட்டத்தில் பேச்சுகள் நடத்தப்பட்டுவருகின்றன. அந்தவகையில் ஜனாதிபதி மிக விரைவில் நடவடிக்கை எடுப்பார். சிலவேளை அரசாங்கமும் இதற்குரிய தீர்வை வழங்கலாம்.” – என்றார்.