பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா வேதன வழக்கிலிருந்து, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் விலகுகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபாய் வேதன அதிகரிப்புக்கு எதிராக முதலாளிமார் சம்மேளனத்தால் தொடுக்கப்பட்ட வழக்கு கடந்த ஒரு வருட காலமாக நிலுவையில் காணப்படுகின்றது.
இத்தகையதொரு நிலையில் நேற்றையதினம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்கு மீண்டும் எதிர்வரும் 6 மாதம் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது .
மலையக மக்கள் சார்பாக இவ் வழக்கின் ஆரம்ப முதல் இன்று வரை இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் முன்னின்று செயற்பட்டு வந்த நிலையில் நாங்கள் முழுமையாக வழக்கில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளோம்.
காரணம் நம் நாட்டின் தற்போதைய சூழ்நிலை அனைவரும் அறிந்த விடயம் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினால் மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இன்றைய வாழ்வாதார சூழ்நிலைக்கு அமைய பெருந்தோட்ட மலையக மக்களின் ஒருநாள் வேதனம் குறைந்தது 2 ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் அதை விடுத்து விட்டு இன்னமும் ஆயிரம் ரூபாய்க்கு போராடுவது அர்த்தமற்ற விடயம்.
புதிதாக பதவியேற்றுள்ள தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் தொழில் ஆணையாளருக்கும் இன்றைய தினம் நான் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளேன் .இக்கடிதத்தில் உடனடியாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழில் ஆணையாளருக்கும் இடையே பேச்சுவார்த்தை ஒன்றை ஏற்படுத்தி கூட்டு ஒப்பந்தம் அல்லது கூட்டு ஒப்பந்தத்திற்கு சமமான வேறொரு பொறிமுறையை ஏற்படுத்தி பெருந்தோட்ட தொழிற்சங்கங்களுடன் இணைந்து உடனடியாக பெருந்தோட்ட மலையக மக்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழில் பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தரபடல் வேண்டும் .” – என்றார் வடிவேல் சுரேஷ்.