‘தோட்டப் பகுதிகளில் தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்தவும்’

தோட்டப் பகுதிகளில் கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் மிகவும் மந்த கதியில் இடம்பெற்று வருகின்றன. நாட்டில் கொரோனா மற்றும் டெல்டா வைரஸ் பரவல் வெகுவாக அதிகரித்து வரும் நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை துரிதப்படுத்தி உயிர் ஆபத்துகளில் இருந்து பாதுகாக்க வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் அவசர கோரிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

கடந்த ஒன்றரை வருட காலமாக எமது நாட்டில் 3 இலட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியும், 6250 க்கும் அதிகமானோர் மரணமாகியும், 3 இலட்சம் பேர் குணமாகியும் வருகின்ற நேரத்தில் தோட்டப் பகுதிகளில் இன்னமும் முறையாக தடுப்பூசி ஏற்றப்படாமல் இருகின்றது.

இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தில் சுமார் 1500 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு மக்கள் தயாராக சென்ற போதிலும் தடுப்பூசி வரவில்லை என்று திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள். இவ்வாறு தொழிலாளர்களை கண்டு கொள்ளாமல் இருப்பது பாரதூரமான செயலாகும்.

நாடே கொரோனா தொற்றால் முடங்கிக் கிடந்த போதிலும் தோட்டத் தொழிலார்கள் முடங்காமல் தேயிலைப் பயிர்ச் செய்கையை காப்பாற்றி வந்துள்ளார்கள். கொரோனா ஆரம்ப காலத்தில் அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக கவனம் எடுத்த போதிலும் நாளடைவில் கையுறைகள், முகக் கவசங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் உள்ளன.

அத்தோடு, தோட்ட மக்கள் மத்தியில் இன்று வரை போதுமான விழிப்புணர்வு ஏற்படாமலும், ஏற்படுத்தப்படாமலும் இருக்கின்றது. இன்றைய உயிராபத்து நிறைந்த சூழ்நிலையில் தோட்டப் பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடனேயே வாழ வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.

கொரோனா தொற்றாளர்களை அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி கவனிக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் லயன்களில் வாழும் தோட்ட மக்களுக்கு தனிமைப்படுத்துவதற்கு ஏற்ற வசதிகள் எதுவும் இல்லாதுள்ளது. முழுக் குடும்பமுமே ஒரு வீட்டில் வசிக்கும் போது தனிமைப் படுத்துவதற்கான அறைகளோ, மலசல கூடங்களோ இல்லாதுள்ளமையும் குறிப்பிடத் தக்கது.

இத்தகைய இக்கட்டான நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையை கொரோனா மத்திய நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு எமது தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டும் எதுவும் நடக்கவில்லை.

அதேநேரம், டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களின் தொகை நாளாந்தம் அதிகரித்து வருவதோடு, அங்கு உயிரிழப்பவர்களின் சடலங்களை வைத்திருப்பதற்குத் தேவையான களஞ்சிய அறைகள் இல்லை என்றும் சுட்டிக் காட்டப்பட்டு வருகின்றது. அங்கு தினசரி 6 – 7 கொரோனா மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன.

எனவே, வைத்தியசாலைகளில் இடமில்லாமலும், வீடுகளில் தனிமைப்படுத்தும் வசதிகள் இல்லாமலும் மக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்ற நேரத்தில் தோட்டங்களில் உள்ள பழைய தேயிலைச் தொழிற்சாலைகள், சனசமூக நிலையங்கள் மற்றும் கலாசார மண்டபங்கள் போன்றவற்றை தனிமைப்படுத்தும் நிலையங்களாக மாற்ற அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்து உதவ முன்வர வேண்டியது அவசியமாகும்.

மேலும், இன்று கொரோனா, டெல்டா வைரஸ்கள் வேகமாகப் பரவி வருவதால் பொது மக்கள் அனாவசியமாக நகரங்களுக்கு வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். முகக் கவசம் அணிந்து, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும்.

எந்த நேரத்திலும் நாடும், நகரங்களும் முடக்கப்பட்டு ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதால், முடிந்த வரை அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்து வைத்துக் கொள்வதிலும் மக்கள் கவனம் செலுத்த வேண்டும்.

Related Articles

Latest Articles