மத்திய, ஊவா, சப்ரகமுவ, மேல், தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலுள்ள தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் 864 பாடசாலைகள் இயங்குகின்றன.
அப்பாடசாலைகளில் அதிகமானவை நகரங்களிலிருந்து தூரப் பிரதேசங்களில் அமைந்துள்ளமையால், அதிபர்மார் மற்றும் ஆசிரியர்களுக்கு பாடசாலைகளுக்குச் செல்வதற்குச் சிரமங்கள் காணப்படுகின்றன.
அப்பாடசாலைகளில் இரண்டாம்நிலைக் கல்வி வகுப்புக்களில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையால் க.பொ.த சாதாரணதரப் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை போன்ற தேசியப் பரீட்சைகளில் அப்பாடசாலைகளின் மொத்தத் தேர்ச்சி ஏனைய அரச பாடசாலைகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த மட்டத்தில் இருக்கின்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலைமை பெரும்பாலும் இளைஞர் தலைமுறையினர் திறனற்ற தொழிலாளர்களாக உருவாவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
அதனால், தோட்டப் பாடசாலைகளில் மனிதவளம் மற்றும் பௌதீக வளங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயத் தேவை காணப்படுகின்றது.
அதற்கமைய, ஆசிரியர் பற்றாக்குறையைக் குறைத்து இப்பாடசாலைகளில் மனித வளங்களை அதிகரிப்பதற்கு இயலுமை கிட்டும் வகையில், அந்தந்த மாகாணங்களில் ஆசிரியர் விடுதி தேவைகள் காணப்படுகின்ற 14 தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை நிர்மாணிப்பதற்கான கருத்திட்டங்களை அந்தந்த மாகாண சபைகள் மூலமாக அமுல்படுத்துவதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.










