தொழிலாளர் தேசிய சங்கத்தின் உறுப்பினர் நகுலேஷ்வரன் கைதாகவில்லை என்று அவரது கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
வழக்கு விசாரணையொன்றுக்காக வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் இன்று நீதிமன்றம் சென்றிருந்தார் எனவும், வாக்குமூலம் வழங்கிவிட்டு அவர் வெளியேறினார் எனவும் அவர்கள் கூறினர்.
இந்த தகவலை தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா. சிவநேசனும் ‘மலையககுருவி’யிடம் உறுதிப்படுத்தினார்.
ஆவண மோசடி குற்றத்துக்காக நகுலேஷ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார் என முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் ரவி குழந்தைவேலால் ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை அடிப்படையாகக்கொண்டே நகுலேஷ் கைதானார் எனவும் கூறப்பட்டது.
நகுலேசுக்கு எதிராக தான் வழக்கு தொடுத்ததாகவும், அதற்காக அவர் இன்று கைது செய்யப்பட்டதாகவும் நோர்வூட் பிரதேச சபை தலைவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே மேற்படி செய்தி மலையக குருவிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
எனினும், நகுலேஸ்வரன் கைதாகவில்லை என்பதனை தற்போது மலையக குருவி உறுதிப்படுத்திக்கொண்டது.
குறிப்பு – உறுதிப்படுத்தப்பட்ட தகவலை ஊடகநெறிமுறை தவறாது வாசகர்களுக்கு வழங்கவேண்டும் என்பதே ஊடக கோட்பாடு – தர்மமாகும். அதனை மலையக குருவி தொடர்ந்தும் பின்பற்றிவருகின்றது. இனியும் பின்பற்றும். அதேபோல் ஏதேனும் ஒரு இடத்தில் தவறு இடம்பெற்றிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்பதும் ஊடக மரபாகும். அந்தவகையில் நகுலேஷ் கைது செய்யப்பட்டுள்ளார் என வெளியிட்ட தகவலுக்காக வருந்துகின்றோம்.
(ஆ-ர்.)
