” உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு தொழில்நுட்ப உதவிகளை பெறுவது குறித்து அரசு கவனம் செலுத்தியுள்ளது.” – என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
” நல்லிணக்க வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து இனக்குழுக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதோடு, ஸ்திரத்தன்மையை உருவாக்கி, பொருளாதாரத்தை பலப்படுத்துவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும்.” – எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.
நல்லிணக்க நோக்கங்களுக்காக 3 அத்தியாயங்களின் கீழ் நகர்வுகள் முன்னெடுக்கப்படும்.
அதன் முதல் அத்தியாயமாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி நாடாளுமன்றத்தின் ஏனைய கட்சிகளின் ஆதரவினை பெற்று, அனைத்து இலங்கையர்களுக்கும் கிடைக்க வேண்டிய கௌரவம் தொடர்பான விரிவான இணக்கப்பாட்டினை எட்டுவதாகும்.
அடுத்த கட்டமாக, சர்வதேச தரத்திற்கு அமைவாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசிப்பதாகும்.
பொறுப்புக்கூறல் செயற்பாடுகளுக்காக உண்மையை கண்டறிவதற்கான உள்ளக பொறிமுறை ஒன்றை நிறுவுவதே இதன் மூன்றாம் அத்தியாயமாகும். அத்துடன், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், தென் ஆபிரிக்காவின் அனுபவங்கள் குறித்து ஆராயவும் தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகிறது.” என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
