நல்லிணக்கம் குறித்த தேசிய கொள்கை திட்டத்தை தயாரிக்க அமைச்சரவை அனுமதி!

நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை மற்றும் செயற்பாட்டுத் திட்டத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு,

‘2024 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க, தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலக சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை மற்றும் தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை தயாரிப்பதற்கும் அமுல்படுத்துவதற்குமான அதிகாரம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை மற்றும் செயற்பாட்டுத் திட்டத்தை தயாரிப்பதற்கு அடிப்படையாக அமைகின்ற படிமுறைகளை தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் தயாரித்துள்ளது.

முன்மொழயப்பட்டுள்ள தேசிய கொள்கை மற்றும் செயற்பாட்டுத் திட்டத்தின் மூலம், நிறுவன ரீதியான பொறிமுறைகளைப் பலப்படுத்தல், மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தல், இனங்களுக்கிடையிலான மற்றும் சர்வமத உரையாடல்களை ஊக்குவித்தல் மற்றும் இளைஞர்களையும் பெண்களையும் சமாதானத்தின் முகவர்களாக வலுப்படுத்தல் போன்ற கூட்டான தேசிய விருப்புக்களை அடைவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கமைய பல்துறைசார் அணுகுமுறை மூலம் 2025-2029 காலப்பகுதிக்கான நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை மற்றும் செயற்பாட்டுத் திட்டத்தை தயாரிப்பதற்கும், அதற்குரிய அமைச்சுகள் மற்றும் நிரல் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய அமைச்சுக்களுக்கு இடையிலான செயலணியொன்றை தாபிப்பதற்கும் தேவையான தொழிநுட்ப, விநியோக, நிதி மற்றும் நிர்வாக ஒத்துழைப்புக்களை இலங்கையில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்தின் மூலம் பெற்றுக்கொள்வதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.” – என்றார்.

Related Articles

Latest Articles