“ சர்வதேச நுகர்வோர் உரிமை தினமான இன்று நாட்டு மக்கள் பட்டினியில் தவிக்கின்றனர். மூன்று வேளை உணவு உண்டு வாழ முடியாத சகாப்தம் உருவாகி வருகிறது. இதனால் நாட்டு மக்கள் ஆட்சியாளர்களுக்கு சாபமிட்டு வருகின்றனர்.” என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
“ நாட்டின் பாதிப் பேர் ஏழ்மையை அடைந்துள்ளனர், ஏழைகளில் பாதி பேர் வாழ்க்கைச் செலவைத் தாங்க முடியாமல் நுகர்வோர் உரிமைகளை முற்றாக இழந்துள்ளனர். எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து நுகர்வோர் உயிரிழந்தும், தரக்குறைவான உரங்களால் விவசாய பயிர்கள் அழிந்தும், வகுப்பறைகளில் மாணவர்கள் மயக்கமடைந்து விழுந்தும் மக்களின் வாழ்வு சீரழிந்தாலும், இன்றும் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை.” எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
விலை கட்டுப்பாட்டை பேண முடியாதவாறு தனிப்பட்டவர்கள் தீர்மானிக்கும் முதலாளித்துவ முறை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அரச சொத்துக்கள், வளங்களைச் சுரண்டி, பொருட்களின் விலைகள் தொடர்பாக பிரச்சினைகள் வரும்போது அவற்றைத் தொடக் கூடாது,அது குறித்த தீர்மானத்திற்கு வர முடியாது, இதில் தலையீடு செய்ய வராதீர் என்றவாறு இந்த நட்பு வட்டார பெரும் முதலாளித்துவவாதிகள் நடந்து வருகின்றனர். இது ஒரு ஆபத்தான போக்கு என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 123 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், கொழும்பு, சீதாவக்கை, சாந்த ஜோன் பொஸ்கோ மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (15) திகதி இடம்பெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“ ஒருவர் பசியுடன் இருந்தால், நாம் அனைவரும் ஒன்றிணைந்து பசியைப் போக்க கூட்டாக செயற்பட வேண்டும். ஆனால் இன்றும், மக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டு தேசிய சொத்துக்களுக்கும் நாட்டு வளங்களும் சுரண்டல், இலஞ்சம், ஊழல், மோசடிகளுக்குட்பட்டு வரும் போக்கே அதிகமாக காணப்படுகின்றன. இந்த நிலையை தடுப்பதற்கு அரசியலமைப்பில் புதிய திருத்தங்கள் தேவை.” எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.