நுவரெலியா பிரதேச சபையின்கீழ் இயங்கும் நானுஓயா நகரில் உள்ள கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் , நகரில் உள்ள வீதியோரங்களில் இரவு, பகல் வேலைகளில் திட்டமிட்டே ஒரு சிலரால் காய்கறிக் கழிவு, பிளாஸ்டிக் குப்பைகள் , உடைந்த கண்ணாடிகள், விவசாய மருந்து வெற்றுப் போத்தல்கள் மற்றும் எலும்புத்துண்டுகள் , எளிதில் மக்கிப்போகாத பொலித்தீன் பைகளில் கட்டப்பட்ட சில கழிவுப்பொருட்கள் அடங்கிய குப்பைகளை கட்டி வீசிசெல்கின்றனர் என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் நானுஓயா பிரதான நகரம் அசுத்தப்படுவதாகவும் , சுகாதார சீர்கேடான நிலையில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை மூடியபடி நடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் வீதியோரங்களில் கொட்டப்படும் குப்பைகளினால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. வீதியோரம் குப்பைகளை கொட்டுவதால் அதனை சாப்பிடுவதற்காக கால்நடைகள் பிரதான வீதியில் சுற்றித் திரிவதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகன சாரதிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர் , அத்துடன் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறன.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த பகுதியில் குப்பைகளை அகற்றவும், குப்பைகளை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நானுஓயா நிருபர்
