நுவரெலியா நீதவான் திருமதி குஷிகா குமாரசிறி 2024 ஜனவரி முதலாம் திகதி முதல், கடமைகள் எதுவுமின்றி மஹியங்கனை மாவட்ட நீதிமன்றத்திற்கு மேலதிக பதில் மாவட்ட நீதிபதியாக நீதிச் சேவை ஆணைக்குழுவினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர்களின் திறமையின்மையினால் வழக்குகள் தாமதப்படுத்துவதாக நீதவான் குற்றம் சுமத்தியதையடுத்து, நவம்பர் 06 ஆம் திகதி நீதவான் பணிப்புரைக்கு எதிராக திட்டமிட்ட வகையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரும் நீதிமன்ற கடமைகளில் இருந்து வெளியேறியதாக நுவரெலியா சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தின் பின்னர், டி.ஐ.ஜி சட்டத்தரணி ருவான் குணசேகர நுவரெலியா நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்து குறித்த பெண் நீதிபதியை சந்தித்து, பொலிஸ் திணைக்களம் சார்பாக தனது வருத்தத்தை தெரிவித்ததாகவும் நுவரெலியா சட்டத்தரணிகள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
நவம்பர் 6ஆம் திகதி நுவரெலியா நீதிவான் நீதிமன்றில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் நடத்தை மற்றும் செயற்பாடுகளை கண்டித்து, நுவரெலியா சட்டத்தரணிகள் சங்கம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு தீர்மானம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
நுவரெலியா சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் டி.ஆதவன் மற்றும் தலைவர் என்.டி.ஹேரத் ஆகியோர் கையொப்பமிட்டே இந்த தீர்மானத்தை அனுப்பிவைத்துள்ளனர்.
இருந்த போதிலும் நுவரெலியா நீதவான் திருமதி குஷிகா குமாரிசிறிக்கு தண்டனையின் அடிப்படையில் வழங்கப்பட்ட இடமாற்றம் தொடர்பாக நீதிமன்ற நீதவான்கள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நிலையில் இந்த செயற்பாடானது பொலிஸ் அதிகாரத்திற்கு சட்டத்துறை உட்பட்டுள்ளதாகவே கருதுவதாக நுவரெலியா சட்டத்தரணிகள் சங்கத்தின் அனைத்து சட்டத்தரணிகளும் கருத்து தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் அதிகாரத்திற்கு நீதித்துறை உட்பட்டுள்ளதாகவும், நுவரெலியா சட்டத்தரணிகள் சங்கத்தின் அனைத்து சட்டத்தரணிகளும் இந்த தண்டனை இடமாற்றம் தொடர்பில் தமது அதிருப்தியையும் கவலையையும் வெளிப்படுத்துவதாகவும் சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி ஆதவன் மேலும் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு