நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைவதற்கு முன்னர் சட்டத்தரணிகளை சோதனைக்குட்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்டத்தரணிகள் சங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்கு சென்ற பதில் பொலிஸ் மா அதிபரிடம், அங்கு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பினர்.
‘திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரு குழுக்களுக்கு இடையில் ஏற்படும் முரண்பாடுகள் காரணமாக இவ்வாறான சம்பவங்கள் பதிவாகின்றன. எனவே இந்த குற்றச்செயல்களை வழிநடத்தும் தரப்பினர் மற்றும் அதனை மேற்கொள்ளும் தரப்பினரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நீதிமன்றத்துக்குள் சட்டத்தரணிகளை போன்று சந்தேகநபர்கள் உள்நுழைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. நீதிமன்ற வளாகத்துக்குள் சட்டத்தரணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை. எனவே இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்தியுள்ளனர்.
எனவே, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்க நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணிகளை சோதனைக்கு உட்படுத்த உள்ளோம். எனவே இந்த விடயத்தில் எமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரிக்கை விடுக்கிறோம். நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதம் சகிதம் பொலிஸாரை ஈடுபடுத்த அனுமதி கோரவும் எதிர்பார்க்கின்றோம்.” – என்றார்.










