கொரிய நாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணத்தை மேற்கொண்டு நுவரெலியாவுக்கு வருகை தந்த இளம் யுவதியிடம் தகாத வகையில் சேட்டை செய்த இயந்திர படகு ஓட்டுனர் ஒருவரை விளக்கமறியலில் வைக்க நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரபுதிகா நாணயக்கார (01) மாலை பிறப்பித்துள்ளார்.
நுவரெலியாவுக்கு சுற்றுலா பயணியாக வருகை தந்திருந்த கொரியா நாட்டு இளம் யுவதி கிறேகறி தெப்பக்குள பகுதிக்கு (30) மாலை அழகை ரசிக்க சென்று அங்கு குளத்தில் இயந்திர படகில் சவாரி செய்ய முற்பட்டுள்ளார்.
இந்த சமயத்தில குளத்தில் படகு சேவையில் ஈடுப்பட்டிருந்த இளைஞர் குறித்த யுவதியிடம் சேட்டையில் ஈடுப்பட்டுள்ளார்.
இதையடுத்து இந்த யுவதி நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று தனக்கு நேர்ந்ததை முறையிட்டுள்ளார்.அதேநேரம் யுவதியின் முறைப்பாட்டை ஏற்ற சுற்றுலாத்துறையை பொறுப்பான பொலிஸ் பிரிவினர் கிறேகறி குளத்திற்கு சென்று சேட்டையில் ஈடுப்பட்ட இளைஞரை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞரை விசாரணைகளின் பின் (01) மாலை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் பொலிசார் முன்னிலைப்படுத்திய போது வழக்கை விசாரித்த நீதவான் பிரபுதிகா நாணயக்கார சந்தேக நபரை எதிர்வரும் (15) ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
ஆ.ரமேஷ்