பண்டோரா ஆவணம் தொடர்பில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டால் அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பண்டோரா ஆவணத்தில் ரஷ்யா ஜனாதிபதி புடின், இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் உட்பட பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. நிருபமா ராஜபக்ச, ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், பண்டோரா ஆவண விவகாரத்தை ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராக திருப்புவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இதற்கான ஒத்திகைகளும் இடம்பெற்றுள்ளன.

நிருபமா ராஜபக்ச எமது கட்சியை சேர்ந்தவர் அல்லர். அவர் சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக இருக்கின்றார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, சி.ஐ.டி. என முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கு பல இடங்கள் உள்ளன. அங்கு சென்று முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டால் உரிய விசாரணை இடம்பெறும். சுயாதீன விசாரணைக்கு அரசு வழிசமைத்து கொடுக்கும்.
இதற்கு முன்னர் பனாமா ஆவணம் வந்தது. அதில் சம்பிக்கவின் பெயர் இருந்தது. எங்கேயோ உள்ள ஒரு அமைப்பு நடத்திய ஆய்வை அடிப்படையாகக்கொண்டு ராஜபக்ச குடும்பத்தை தாக்க வேண்டும்.” – என்றார்.










