17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் 39-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சென்னை அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி (பெங்களூரு, குஜராத், கொல்கத்தா, மும்பைக்கு எதிராக) 3 தோல்வி (டெல்லி, ஐதராபாத், லக்னோவுக்கு எதிராக) என 8 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.
லக்னோ ஸ்டேடியத்தில் நடந்த முந்தைய ஆட்டத்தில் இதே லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை சென்னை அணி எதிர்கொண்டது. அதில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதற்கு சுடச்சுட பதிலடி கொடுக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.
லக்னோ அணியும் 4 வெற்றி, 3 தோல்வி என்று 8 புள்ளிகளுடன் உள்ளது. கடந்த ஆட்டத்தில் சென்னை அணி 177 ரன்னை இலக்காக நிர்ணயித்த போதிலும், கேப்டன் லோகேஷ் ராகுல், குயின்டான் டி காக் அரைசதம் அடித்து லக்னோவை எளிதில் வெற்றி பெற வைத்தனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் கூடுதல் நம்பிக்கையுடன் இறங்குவார்கள். இரு அணிகளும் சரிசம பலத்துடன் மோதுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.