பதுளை மாவட்டத்தின் பசறை, லுனுகலை, மீதும்பிட்டிய, மடுல்சீமை , தொமோதரை மற்றும் கந்தேகெதர பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த காற்று வீசுவதுடன் இடைக்கிடையே மிதமான மழையும் பெய்வதோடு கடும் குளிரும் நிலவி வருகின்றது.
இதன்காரணமாக பசறை மீதும்பிட்டிய, கந்தேகெதர- லெஜர்வத்தை ஆகிய பகுதிகளில் வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்துள்ளன.
பாரிய மரங்கள் வேரோடு வீதிகளில் சாய்ந்துள்ளன. அம்மனிவத்தை, மீதும்பிட்டிய, கந்தேகெதர மற்றும் தெமோதரை பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசுவதால் பாரிய மரங்கள் மேலும் சரிந்து விழும் அபாய நிலை அதிகரித்துள்ளது.
இதேவேளை பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மாவட்ட அனர்த்த நிலை தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடும் மழையின் காரணமாக இதுவரை 706 குடும்பங்களைச் சேர்ந்த 2727 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 319 வீடுகளுக்கு பகுதியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ள 296 குடும்பங்களைச்சேர்ந்த 1113 பேர் அவர்களது உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
லுனுகலை, எல்ல, பசறை, பதுளை, மஹியங்கனை மற்றும் சொரணத்தோட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான 9 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 78 குடும்பங்களைச் சேர்ந்த 288 பேர் தங்கவைக்கப்பட்டு பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
வளிமண்டலத் தாழமுக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள இவ் அசாதாரண வானிலை தொடருமாயின் சேதங்கள் அதிகரிக்கும் நிலை பதுளை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது.
பசறை நிருபர்.
