பத்தேகம சமித்த தேரரின் மறைவு பேரிழப்பு – செந்தில் தொண்டமான் இரங்கல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தென் மாகாண சபை உறுப்பினருமான சங்கைக்குரிய பத்தேகம சமித்த தேரர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு காலமானார். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிராத்தித்திப்பதாக பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளரும், இ.தொ.காவின் உபதலைவருமான செந்தில் தொண்டமான் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் .

பத்தேகமவில் 1952 ஜனவரி 4 பிறந்த இவர், தனது பல்கலைகழக காலத்திலேயே அரசியலில் ஆர்வம் உடையவராக திகழ்ந்தார். அவர் தனது பட்டப்படிப்பை ஜெர்மனில் உள்ள பல்கலைக்கழகத்தில் முடித்தார்.

இடதுசாரிக் கட்சியான லங்கா சம சமாஜக் கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தி, காலி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்குத் தெரிவான இவர், 2001 தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரை அந்தப் பதவியை வகித்து வந்தார்.

இவர் இலங்கையின் முதல் முறையாக பாராளுமன்றம் சென்ற பௌத்த பிக்குவாகும். இளமைக் காலம் முதல் – இடதுசாரிக் கட்சியான லங்கா சம சமாஜக் கட்சியுடன் இணைந்து – சமித தேரர் செயற்பட்டு வந்தார்.

துறவிகள் அரசியலில் பங்கேற்க முடியுமா என்ற வாதப்பிரதவாதங்கள் சமூகத்தில் ஆழமாக ஏற்ப்பட்ட சூழலில்,துறவிகளின் கௌரவத்தைப் பாதுகாத்த வண்ணம் அவர் அந்த பணியை மேற்கொண்ட விதம் அரசியலில் ஆர்வமுள்ள அனைவருக்கும் ஒரு வழிகாட்டுதலாகும்.

பன்முகத்தன்மையில் ஒற்றுமை மற்றும் ஒரு இலங்கை தேசத்தின் இருப்பு என்பன எப்போதும் அவரது தூரநோக்காகவும், அரசியல் நடைமுறையின் முதல் முன்னுரிமையாகும் இருந்தது.அதற்காக தைரியமாக குரல் எழுப்பிய அவர்,ஒரு வலுவான ஆளுமை கொண்டவர் என்பதை எடுத்துறைத்தது.

இலங்கையில் இன, மத நல்லிணக்கத்துக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்தவர் பத்தேகம சமித்த தேரர்.

சங்கமித்த தேரருடன் நான் கலந்துரையாடிய பல தருணங்களில், பெருந்தொட்ட தமிழர்களின் நிலை குறித்த கரிசணை அதிகம் இவரிடம் இருந்ததை உணர்ந்தேன். அவர் முற்போக்கான ஒரு பௌத்த பிக்கு. தமிழ், முஸ்லிம் மக்களின் நலன்களில் தீவிர அக்கறை கொண்டவராக இருந்தார். சிறுபான்மை மக்களுக்கு அரசியல் தீர்வொன்று கிடைக்க வேண்டும் என்பதற்காக குரல்கொடுத்தார்.

இவர் பெளத்ததிற்கும், சமூக நலனிற்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். தமிழ் சமூகத்தின் மீது அக்கறையும் கரிசனையும் கொண்டவராகவும் இருந்தார்.

மத நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, மனித குலத்தின் சமத்துவம், மனித உரிமைகள் மற்றும் உலகளாவிய நீதிக்கான தனது பணியை முன்னெடுப்பதற்கான அவரது முயற்சிகளை ஒரு போதும் மறக்க முடியாது.

இவ்வாறு முற்போக்கு சிந்தனை கொண்ட பத்தேகம சமித்த தேரரின் இழப்பு பெருந்துயர். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிராத்திக்கின்றேன்.

Related Articles

Latest Articles