நுவரெலியா, லபுக்கலை தோட்ட பிரிவான பம்பரகலை தோட்டத்தில் தாக்குதல் ஈடுபட்டு, அச்சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தோட்ட முகாமையாளர்கள் இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் பிரபுதிகா லங்கான்தினி இன்று (12) மாலை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
நுவரெலியா பம்பரகலை தோட்டத்தில் கள உத்தியோகத்தர் ஒருவருக்கும், தோட்ட முகாமையாளர் இருவருக்கும் இடையில் கடந்த (28.02.2024) ஆம் திகதி தொழில் ரீதியாக வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பில் முடிந்துள்ளது.
தோட்ட தேயிலை காணிக்கு விசிர வழங்கப்பட்ட மருந்தை மீதம் வைத்தமையால் கள உத்தியோகஸ்தரை தோட்ட முகாமையாளர் தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.
இதை கேள்வியுற்ற கள உத்தியோகஸ்தரின் மகன் சம்பவ இடமான பம்பரகலை தோட்ட கொழுந்து மடுவத்துக்கு வருகை தந்து, தனது தந்தையை தகாத வார்த்தைகளால் திட்ட வேண்டாம் என தோட்ட முகாமையாளரிடம் கூறியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் தோட்ட முகாமையாளர் இருவர் “ நீ யாரடா” என வார்த்தை பிரயோகம் செய்து தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கள உத்தியோகஸ்தர் மற்றும் அவரின் மகன் ஆகியோர் தோட்ட முகாமையாளர்களை தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தோட்ட முகாமையாளர் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து தோட்ட முகாமையாளர்களை தாக்கிய கள உத்தியோகஸ்தர் மற்றும் அவரின் மகன் ஆகியோரை கைது செய்த பொலிஸார், அவர்களை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் பிரபுதிகா லங்கான்தினி முன்னிலையில் முற்படுத்தினர்.
இதன்போது சந்தேக நபர்களான தந்தை மற்றும் மகனை ஏழு நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மீண்டும் இந்த வழக்கு விசாரணை கடந்த (07.03.2024) அன்று விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான், விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த கள உத்தியோகஸ்தரான தந்தை மற்றும் மகனை ஒரு லட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதி வழங்கி வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.
இந்த நிலையில் பிணையில் விடுதலையான கள உத்தியோகஸ்தர் தன்னையும் தன் மகனையும் தோட்ட முகாமையாளர்கள் தாக்கியமைக்கு நீதி வேண்டும் என நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவிட்டுள்ளனர்.
இவர்களின் முறைப்பாட்டை ஏற்ற பொலிஸார் தாக்குதலில் ஈடுப்பட்ட தோட்ட முகாமையாளர் இருவரை விசாரணைக்கு அழைத்து , பின் அவர்களை கைது செய்து (12.03.2024) மாலை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் பிரபுதிகா லங்கான்தினி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
இதன்போது வழக்கை விசாரித்த நீதவான் தோட்ட முகாமையாளர் இருவரையும் எதிர் வரும் (18.03.2024) வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
ஆ.ரமேஸ்