பயணப் பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்? வெளியானது தகவல்

சப்புகஸ்கந்த பகுதியில் பயணப் பையிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் கொழும்பு, மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவர் என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சப்புகஸ்கந்த எரிப்பொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள கழிவுப் பொருட்களுடன் காணப்பட்ட பயணப் பையொன்று நேற்று மீட்கப்பட்டிருந்தது.

அதற்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் இருந்துள்ளது. இச்சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தது. அக்குழுக்களால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் பிரகாரமே, சடலம் யாருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த சடலம் மீதான சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனை இன்று நடத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles