தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடரின் முதலாவது ஒரு நாள் போட்டி இன்று 02ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகல் இரவு போட்டியாக ஆரம்பமாகின்றது.
தசுன் ஷானக்க தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அணிக்கு பிரதி தலைவராக தனஞ்சய டி சில்வா செயற்படவுள்ளதோடு, அண்மையில் இலங்கை கிரிக்கெட் ஒழுங்கு செய்த டயலொக் அழைப்பு ரி 20 தொடரில் திறமையினை வெளிப்படுத்திய வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் இரண்டு கரங்களாலும் பந்துவீசும் ஆற்றல் கொண்ட சகலதுறை வீரரான கமிந்து மெண்டிஸ் இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணியில் தன்னை பிரதிநிதித்துவம் செய்வதற்கான வாய்ப்பினை பெற்றிருக்கின்றார்.
அதேநேரம், அனுபவ துடுப்பாட்ட வீரரான தினேஷ் சந்திமாலுக்கும் இலங்கை அணிக்காக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இலங்கை அணியின் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் குசல் பெரேரா, விளையாடமாட்டார்.
ஏனைய இரு ஒரு நாட்கள் போட்டிகள் 4 மற்றும் 7ம் திகதிகளில் நடைபெறவுள்ளதுடன், ரி 20 தொடர் 10, 12 மற்றும் 14ம் திகதிகளில் கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரி-20 உலகக்கிண்ண தொடருக்கு முன்னர் இரு அணிகளுக்கும் இது இறுதி சர்வதேச போட்டித் தொடராகும்.