நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா- பட்டல்கெலே தொழிற்சாலைப் பிரிவில் நேற்றிரவு பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் கல்வியியற் கல்லூரி மாணவியொருவர் காயமடைந்து டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை கேள்வியுற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்று சம்பவ இடத்துக்கு நேரில் சென்றார்.
பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளையும் , குடியிருப்புகளை விரைவில் புனரமைத்து கொடுக்குமாறும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகளுக்கும், தோட்ட நிர்வாகத்திற்கும் பணிப்புரை விடுத்தார்.
அத்துடன், காயமடைந்த மாணவியை இராஜாங்க அமைச்சர் வைத்திய சாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தார்.
பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் முன்னாள் தலைவர் பாரத் அருள்சாமி ,நோர்வூட் பிரதேச சபைத்தலைவர் குழந்தைவேல் ரவி ஆகியொருடன் உடனிருந்தனர்.