போர்க்குற்றம் இழைத்துக்கொண்டிருக்கும் இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்ப முற்படும் இலங்கையின் முயற்சி ஏற்புடையது அல்ல. பாலஸ்தீனர்களின் வீடுகள் பற்றி எரியும்போது அதில் சுருட்டு பற்றவைக்க முற்படக்கூடாது – என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு என்பவற்றுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு.
” இஸ்ரேலுக்கு தற்போதைய சூழ்நிலையில் 10 ஆயிரம் பணியாளர்களை அனுப்புவதற்கான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது. இது கவலையளிக்கின்றது. அதாவது பாலஸ்தீனர்களின் வீடுகள் பற்றி எரியும்போது அதில் சுருட்டு பற்ற வைக்கும் செயலுக்கு ஒப்பானதாகும் இது.
இஸ்ரேல் படைகள் சிறார்களைக் கொல்கின்றன. வைத்தியசாலைகள்மீது தாக்குதல் நடத்துகின்றன. இவ்வாறு அப்பட்டமாக போர்க்குற்றம் இழைக்கப்பட்டாலும் இஸ்ரேல் தளபதிகளுக்கு அமெரிக்கா விசா வழங்குகின்றது. ஏனைய நாடுகளுக்கு மனித உரிமைமீறல் குற்றச்சாட்டு இருந்தால் வழங்கப்படுவதில்லை. இது பற்றி நாமும் கேள்வி எழுப்ப வேண்டும்.
இவ்வாறு போர்க்குற்றம் இழைக்கும் இஸ்ரேலுக்கு எமது நாட்டு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கையானது, ஹிட்லர், யூதர்களை கொல்லும்போது அதனால் ஏற்படும் வெற்றிடத்துக்கு இலங்கையர்களை அனுப்புவதற்கு ஒப்பான செயலாகும்.” – என்றார்.










