“புசல்லாவை, பாரதெக்க – செல்வகந்த கிராமத்துக்கான பாலத்தை புனரமைக்க நடவடிக்கை”

புசல்லாவை, பாரதெக்க – செல்வகந்த கீழ்பிரிவு கிராமத்துக்கு செல்வதற்கான பாலத்தை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி உறுதியளித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமையவே இதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கண்டி மாவட்டம், புசல்லாவை, பாரதெக்க – செல்வகந்த கீழ்பிரிவுக்கு செல்வதற்கான பாதையில் உள்ள பாலம் சேதமடைந்து உடைந்து விழும் அபாயத்தில் உள்ளமை தொடர்பான செய்தியை ‘மலையக குருவி’ பதிவிட்டிருந்தது.

மேற்படி கிராமத்தில் சுமார் 70 குடும்பங்கள் வாழ்கின்றன. மழை காலங்களில்  மக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அச்சத்துடனேயே பாலத்தை கடக்கவேண்டியுள்ளது.

பாலம் சேதமடைந்தும், வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதால் வாகனங்கள்கூட அப்பகுதிக்கு வருவதில்லை. பிரதான வீதிக்கு நடந்துவருவதாக இருந்தால்கூட கடும் போராட்டம்தான். பாடசாலை மாணவர்கள், முதியவர்கள், நோயாளிகள் என பலரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

இப்பாலத்தையும், வீதியையும் புனரமைத்துதருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பான செய்தியை அவதானித்த பின்னர் கிராம மக்களை, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி பேச்சுக்கு அழைத்திருந்தார். கிராம மக்களின் பிரதிநிதியாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் நிர்வாகப் பிரிவின் உதவிப்பணிப்பாளர் ஐயம்பெருமாள் ரவிக்குமார் சந்திப்பில் பங்கேற்றிருந்தார். மக்களின் மனுவையும் கையளித்தார்.இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்துக்கு பாரத் அருள்சாமி கொண்டுவந்தார். தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.”

தற்போதைய கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் தமது கோரிக்கையை ஏற்று, அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அவசர நிதி ஒதுக்கீட்டின் ஊடாகவேனும் பாலத்தை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறிய அமைச்சர் ஜீவன் தொண்டமானும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவரும், இதொகாவின் உப தலைவர் பாரத் அருள்சாமிக்கும்  நன்றிகள்.”  -என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles