” மாவீரர் தினம் அனுஷ்டிப்பதற்கு இடமளிக்கப்படக்கூடாது. அவ்வாறு அனுமதிப்பது அனுதாபம் அல்ல, கையாலாத்தனமாகும்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
அத்துடன், புலிகளை ஒழித்தகையோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தடைசெய்யாமல் விட்டது மஹிந்த இழைத்த பெரும் தவறாகும். மஹிந்த அன்று காட்டிய கருணைதான் இன்று பூகம்பமாக மாறியுள்ளது எனவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு என்பவற்றுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சரத் வீரசேகர மேலும் கூறியவை வருமாறு,
” மாவீரர் தினம் பற்றி பேசப்படுகின்றது, அல்கைதா அமைப்பின் தலைவர் ஒசாமாவை அமெரிக்காவில் நினைவுகூர முடியுமா? உயிரிழந்த பயங்கரவாதிகளை நினைவுகூர இடமளிப்பது அனுதாபம் அல்ல, கையாலாத்தனமாகும்.
‘பயங்கரவாதி’களை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. புலிகள் கர்ப்பிணி பெண்களைக் கொன்றனர். பச்சிளம் குழந்தைகளைக் கொன்றனர். பிக்குகளைக் கொன்றனர். இவ்வாறு கொடூரச் செயல்களில் ஈடுபட்டவர்கள்தான் விளக்கேற்றி அஞ்சலிக்கப்படுகின்றனர்.
தனது கணவன் பயங்கரவாதியாக இருந்தால், தனது மகன் பாலியல் குற்றவாளியாக இருந்தால், மனைவி வீட்டுக்குள் அவர்களுக்காக விளக்கேற்றலாம். ஆனால் பொதுவெளியில் நிகழ்வு நடத்த முடியாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள்தான் இதனை தூக்கிபிடித்துள்ளன.
புலிகள் பணயக் கைதிகளாக வைத்திருந்த மக்களை இராணுவம்தான் மீட்டது? அப்போது இந்த தமிழ்க் கட்சிகள் எங்கிருந்தன? வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்றம் இடம்பெறும்போது ஒரு குழந்தைக்குகூட யோகட் வாங்கிக்கொடுக்காத அரசியல்வாதிகள்தான் அவர்கள். கண்ணி வெடிகளை அகற்றினோம். இராணுவத்தின் செலவில் வீடுகளை அமைத்தோம். ஒரு தேநீர்கூட வழங்க வரவில்லை. இன்று முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்.
யாழில் இரத்தத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால்கூட இராணுவம்தான் வழங்குகின்றது.
செப்டம்பர் 11 இற்கு பிறகே பிரபாகரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிறுவினார். கூட்டமைப்பு என்பது புலிகளின் அரசியல் கிளை. புலிகளை முடித்த கையோடு அக்கட்சியை தடை செய்யாமல் மஹிந்த தவறிழைத்துவிட்டார். மஹிந்த காட்டிய கருணைதான் இன்று பூகம்பமாகியுள்ளது.” – என்றார்.